குஜராத் மாநிலத்தில் இதுவரை 1200க்கும் மேற்பட்ட மாடுகள் வைரஸ் தொற்றால் இறந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து குஜராத் வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்பு அமைச்சர் ராகவ்ஜி படேல் (Raghavji Patel) கூறுகையில்,” இதுவரை 1240 மாடுகள் இந்த நோய் தொற்றிற்கு இறந்துள்ளதாகவும், 5.74 லட்சம் மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில் 17 மாவட்டங்களில் இந்த வைரஸ் தொற்று பரவியிருப்பதாகவும் தெரிவித்தார்.
குச், ஜாம்நகர், தேவ்பூமி துவாரகா, ராஜ்கோட், போர்பந்தர், மோர்பி, சுரேந்தர் நகர், ஆம்ரேலி,. பாவனா நகர், கிர் சோம்நாத், பாதான், சூரத், ஆராவளி, பஞ்ச்மாஹால் உள்ளிட்ட பகுதிகளில் இந்த வைரஸ் தொற்று பரவி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக வேகமாக பரவி வரும் இந்த தொற்றை தடுக்க, ஜீலை 26 ஆம் தேதி அரசு மாடுகளை ஓர் இடத்தில் இருந்து மற்ற இடங்களுக்கு அழைத்து செல்ல தடை விதித்தது.
ராஜ்கோட் மாகணத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை மாடுகளை வேறு மாவட்டங்களுக்கோ, பகுதிகளுக்கோ அழைத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Lumpy skin disease:
மாடுகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த தோல் சம்பந்தமான நோய், வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ளதாகவும்,. இதனால் தோல் மேல் கட்டி போன்று உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கொசுக்கள், ஈக்கள், பூச்சிகள், வண்டுகள் ஆகியவற்றாலும், சுகாதாரமற்ற தண்ணீர் மூலம் உருவாகி விலங்குகளுக்கு பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட விலங்குகளிடம் காய்ச்சல், மூக்கு மற்றும் கண்களில் நீர் வடிதல், அதிகமாக எச்சில் உமிழ்தல், பால் உற்பத்தி குறைவு, உணவு சாப்பிட சிரமம் போன்ற அறிகுறிகள் காணப்படும். இதை கவனித்து சிகிச்சை அளிக்காவிட்டால், தீவிர பாதிப்பாக மாறி உயிரையே பறிக்கும் என்று கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றன.
மாநிலத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விலங்குகளுக்கு தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடை விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 192 கால்நடை மருத்துவர்கள் மற்றும் 568 கால்நடை ஆய்வாளர்கள் இந்த நோயை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் கூடுதலாக 298 கால்நடை மருத்துவர்களும் இப்பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்