உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், மூன்று பெண்கள் உயிரிழந்தனர். விபத்து நடந்து மீட்பு பணிகள் நடைபெற்று கிட்டத்தட்ட 48 மணி நேரத்திற்கு பிறகு மூன்றாவது சடலம் மீட்கப்பட்டது.


லக்னோ ஹஸ்ரத்கஞ்சில் வசீர் ஹசன் சாலையில் அமைந்துள்ள அலயா அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம்தான் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. குடியிருப்பின் இரண்டாவது மாடியில் வசித்து வந்த ஷபானாவின் சடலம்தான் மூன்றாவதாக மீட்கப்பட்டது.


சமாஜ்வாதி கட்சியின் செய்தி தொடர்பாளர் அப்பாஸ் ஹைதரின் மனைவி உஸ்மா ஹைதர் (30) மற்றும் தாய் பேகம் ஹைதர் (72) ஆகியோரும் உயிரிழந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை வட இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் இந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. முதலில் கட்டிட இடிபாடுகளில் 7 பேர் சிக்கியிருக்கலாம் என நம்பப்பட்டது.


பின்னர், புதன்கிழமை அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து 14 பேரை மாநில பேரிடர் மீட்புப் படை மீட்டது. கட்டிடம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, விபத்து குறித்து உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு தெரிவிக்கப்பட்டது.


மாநில பேரிடர் மீட்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு செல்லுமாறு அவர் அறிவுறுத்தினார்.


மேலும் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளிக்குமாறு மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு ஆதித்யநாத் உத்தரவிட்டார். துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக் செவ்வாய்க்கிழமை இரவு நேரில் சென்று பார்வையிட்டார்.


கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 16 பேரில் ஆறு வயது சிறுவனும் ஒருவர். இவருக்கு எஸ்பிஎம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, இவர் நன்றாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், விபத்தில் இருந்து எப்படி தப்பித்தேன் என்பது குறித்து அந்த சிறுவன் தகவல் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த தகவல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, படுக்கையின் கீழ் மறைந்து கொண்டதாகவும் இதனால் உயிர் தப்பியதாகவும் அந்த சிறுவன் கூறியுள்ளார்.


இதில், சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், டோரேமான் மற்றும் நோபிதாவை பார்த்து எப்படி தப்பிக்க வேண்டும் என கற்று கொண்டதாக அவர் கூறியுள்ளார். இதற்கிடையே, கட்டிடத்தின் தரம் குறித்து தற்போது கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. 


இந்த விபத்து தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டு, உத்தர பிரதேச காவல் துறையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. சந்தேக நபர்களின் பெயர்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். நவாசிஷ் ஷாஹித், முகமது தாரிக், ஃபஹத் யஸ்தானி ஆகியோர் சந்தேக நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


மேலும் இரு சந்தேக நபர்களை தீவிரமாக தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 308, 323, 420, மற்றும் 120பி ஆகியவற்றின் கீழ் குற்றவியல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.