மத்தியக் கிழக்கு போரால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, சிலிண்டர் தட்டுப்பாடு உருவாகியுள்ள சூழலில், கேஸ் சிலிண்டர் முன்பதிவில் மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், இதற்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இஸ்ரேல்- அமெரிக்கா, ஈரான் இடையிலான போரால் வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் கச்சா எண்ணெய், எல்பிஜி எரிவாயு பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எல்பிஜி எரிவாயு சிலிண்டர் கிடைக்காமல் போய்விடுமோ என்ற தேவையற்ற பதற்றத்தாலும் அச்சத்தாலும் ஏராளமான மக்கள், முன்பதிவு செய்து குவித்ததாலும் சிலிண்டர் தட்டுப்பாடு செயற்கையாக ஏற்பட்டது.
புதிய கட்டுப்பாடுகள்
எனினும் சிலிண்டர் தட்டுப்பாடு எதுவும் ஏற்படாது என்று ஏற்கெனவே மத்திய அரசு விளக்கம் அளித்து இருந்தது. எனினும் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா பயனாளிகள் மீண்டும் கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்ய 45 நாட்கள் அவகாசம் விதிக்கப்பட்டு உள்ளது என்றும், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டப் பயனாளிகள் அல்லாத பிறர், ஒரு சிலிண்டர் கனெக்ஷனுக்கு 25 நாட்களுக்கு 2 சிலிண்டர்கள் கனெக்ஷனுக்கு 35 நாட்களும் காத்திருக்க வேண்டும் என்று விதிகளில் புதிய மாற்றம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது.
எனினும் இந்தத் தகவலை மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை வாயும் அமைச்சகம் மறுத்துள்ளது. அவ்வாறு எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என்று விளக்கம் அளித்துள்ள அமைச்சகம், ஏற்கெனவே உள்ளதுபோல நகரப் பகுதிகளில் 25 நாட்களும் ஊரகப் பகுதிகளில் 45 நாட்களும் கேஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பதற்றத்தில் முன்பதிவு செய்ய வேண்டியதில்லை
பொதுமக்கள் இத்தகைய வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பதற்றத்தில் தேவையில்லாமல் முன்பதிவு செய்ய வேண்டியதில்லை என்றும் தெரிவித்துள்ள மத்திய அமைச்சகம், நாட்டில் போதிய எல்பிஜி சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளது என்றும் நம்பிக்கை அளித்துள்ளது.
