ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்தாண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து, அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.


நெருங்கும் தேர்தல்:


தேர்தல் நெருங்கும் நிலையில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதலாக ரூ.200 மானியம் வழங்க மத்திய  அமைச்சரவை ஒப்பதல் அளித்துள்ளது. டெல்லியில்  பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


உஜ்வாலா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 10 கோடி எரிவாயு இணைப்புகள் உள்ளதாகவும், தமிழ்நாட்டில் 32 லட்சம் பேர் சமையல் எரிவாயு இணைப்புகளை பெற்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.1,053 ஆகவும், மும்பையில் ரூ.1,052.50 ஆகவும், சென்னையில் ரூ.1,068.50, கொல்கத்தாவில் 1,079 ரூபாயகவும் விற்பனையாகி வந்த நிலையில், தற்போது ரூ.200 குறைக்கப்பட்டுள்ளது.


சிலிண்டர் விலை குறைப்பு குறித்து மம்தா கருத்து:


சிலிண்டர் விலை குறைப்பு குறித்து பேசியுள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானார்ஜி, "கடந்த இரண்டு மாதங்களில், இதுவரை, இந்திய (எதிர்க்கட்சிகள்) கூட்டணியால் இரண்டு கூட்டங்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன. இதன்விளைவாக, தற்போது, எல்பிஜி விலை ரூ. 200 குறைக்கப்பட்டுள்ளது. இதுதான், இந்தியாவின் சக்தி" என குறிப்பிட்டுள்ளார்.


வணிக சிலிண்டர்களின் விலை ஏப்ரல் 1 ஆம் தேதி 2,192.50 ஆக இருந்த கேஸ் சிலிண்டர் விலை கடந்த மே மாதம் 1ம் தேதி 171 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.2021.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து,  கடந்த ஜூன் மாதம் 19 கிலோ எடைகொண்ட சிலிண்டருக்கு 84.50 ரூபாய் குறைக்கப்பட்டது. இதனால், சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.1,937-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், ஜுலை மாத, வணிக சிலிண்டர் விலை 8 ரூபாய் உயர்ந்தது. அதன்பின், ஆகஸ்ட் மாதத்தில் ரூ.99.75 குறைக்கப்பட்டு தற்போது 1,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


எதன் அடிப்படையில் எரிவாயு சிலிண்டரின் விலை நிர்ணயிக்கப்படுகிறது?


டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை  ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, எல்பிஜி, சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி சிலிண்டர் ஆகியவற்றின் விலைகள் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் அரசால் நிர்ணயிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.