தவறான குற்றச்சாட்டில் தன்னை இரண்டு ஆண்டுகள் சிறையில் வைத்ததற்காக அரசாங்கம் தனக்கு ரூ.10 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று மத்தியப் பிரதேச இளைஞர் ஒருவர் கோரியுள்ளார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் கண்டிலால் பீல் (35). இவர் இரண்டாண்டுகளுக்கு முன்னர் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் போலியானவை என நிரூபணமானதால் அவர் விடுவிக்கப்பட்டார்.


ஆனால் விடுதலையை அவர் பெரிதாக நினைக்கவில்லை. தான் இழந்த இரண்டு ஆண்டுகளையே அவர் பெரிதாகக் கருதுகிறார். இரண்டு ஆண்டுகளாக தனக்கு நேர்ந்த தொழில் இழப்பு, போன மரியாதை, இழந்த சொந்தங்கள், அனுபவித்த உடல் ரீதியான, மன ரீதியான வேதனைகள், கடவுள் அருளிய மனிதர்களுக்கான இன்பமான பாலியல் உறவு மகிழ்ச்சி என பல இழப்புகளுக்காக தனக்கு ரூ 10 ஆயிரம் கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


6 பேர் கொண்ட குடும்பத்தில் நான் மட்டும் தான் சம்பாதித்தேன். இரண்டு ஆண்டுகள் சிறையில் தள்ளப்பட்டதால் எனது வயதான தாய், எனது மனைவி, எனது குழந்தைகள் கடும் வேதனைக்கு உள்ளாகினர். அந்த வலியை நான் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எனக்கான சரியான உடைகள் கூட இல்லாமல்தான் நான் சிறையில் வாழ்ந்தேன். 


போலீஸார் போலியாக வழக்கை ஜோடனை செய்து என்னை சிறையில் தள்ளி எனது வாழ்க்கையையும், எதிர்காலத்தையும் சிதைத்து விட்டனர் என்று கூறினார்.


கண்டு லாலின் வழக்கறிஞர் விஜய் சிங் யாதவ் கூறுகையில் என் கட்சிக் காரர் நஷ்ட ஈடு கோரி தொடுத்த வழக்கு ஜனவரி 10-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.  


அதற்காக மட்டும் 2 லட்சம் நஷ்ட ஈடு..


கண்டு லால் கோரியுள்ள மொத்த நஷ்ட ஈடு ரூ.10 ஆயிரம் கோடியே 2 லட்சம். அது என்ன சொச்சம் என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆம் அந்த 2 லட்சம் ரூபாயை இரண்டு ஆண்டு காலம் அவர் இல்லற உறவு சுகத்தை இழந்ததற்காக தனியாக கோரப்பட்டுள்ளது. இந்த 2 லட்சம் தனி இழப்பீடு விவகாரத்தை சமூக வலைதளங்களில் பலரும் பல்வேறு விதமாக விமர்சித்து வருகின்றனர். இந்த சூழலில் இந்த வழக்கு ஜனவரி 10 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த வழக்கு நிச்சயமாக, பராசக்தி படத்தில் வரும் இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்துள்ளன என்ற வசனத்திற்கு பொருத்தமாகவே இருக்கும் என்று கூறலாம்.