உத்தரப் பிரதேசத்தில் லாரி ஏற்றியதால் நிகழ்ந்த விபத்தில் 15 வயது சிறுவன் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். உத்தரப் பிரதேச மாநிலத்தின் காசிப்பூர் மாவட்டத்தின் மொஹம்மதாபாத் பகுதியில் உள்ள அஹிராவ்லி கிராமத்தில் இந்தக் கோர விபத்து நடந்துள்ளது.
அஹிராவ்லி கிராமத்தில் டீக்கடை ஒன்றின் வெளியில் நின்று டீ குடித்துக் கொண்டிருந்த மக்கள் மீது கட்டுப்பாட்டை இழந்து மிக வேகமாக வந்த லாரி ஒன்று மோதியது. இதில் அங்கு டீ குடித்துக் கொண்டிருந்த 6 பேரும் உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இந்த லாரி பாலியா நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. லாரி மோதிய விபத்தில் லாரி ஓட்டுநர் உள்பட பலரும் படுகாயம் அடைந்துள்ளனர்.
50 வயதான உமாஷங்கர் யாதவ், 45 வயதான விரேந்திர ராம், 45 வயதான சந்திர மோகன் ராய், 35 வயதான பிஹாரி குஷ்வஹா, 28 வயதான சத்யேந்திர தாகூர், 15 வயதான கோலு யாதவ் ஆகிய 6 பேரும் இந்த லாரி விபத்து நேர்ந்ததால் சம்பவ இடத்திலேயே பலியானதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த லாரி விபத்தில் பலியான அனைவரும் இதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
டீக்கடை மீது லாரி மோதியதில் 6 பேர் இறந்ததால், கோபம் கொண்ட கிராம மக்கள் லாரி ஓட்டுநரைப் பிடித்துக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். எனினும் சில நேர இடைவெளிக்குப் பிறகு, காவல்துறையினர் லாரி ஓட்டுநரைப் பாதுகாப்பாகக் கூட்டிச் சென்று, கைது செய்து வைத்துள்ளனர். மேலும், காவல்துறையினர் கிராம மக்களின் உதவியுடன் விபத்தில் காயமடைந்தவர்களை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எனினும், கிராம மக்கள் விபத்து நடந்த போது உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனச் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட மேஜிஸ்திரேட், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு உயரதிகாரிகளும் இந்த விபத்துச் சம்பவத்திற்குப் பிறகு, அப்பகுதியில் கூடி மக்களிடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் லாரி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குத் தலா 2 லட்சம் ரூபாய் என நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த விபத்தில் காயமடைந்தோரின் சிகிச்சைகள் விரைவாக அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த லாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யுமாறு அரசு அதிகாரிகளுக்கு உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.