நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய சிறிது நேரத்தில் மக்களவையை ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா. எதிர்கட்சி எம்.பிக்களின் அமலியால் மக்களவையை மதியம் வரை ஒத்திவைத்தார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியதும் பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவையில் பலத்த ஆரவாரத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. மூன்று மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்ற ஒரு நாள் கழித்து மக்களவையில் " தீஸ்ரீ பார் மோடி சர்க்கார் " என்ற கோஷங்களை பாஜக எம்.பிக்கள் எழுப்பினர்.
பிரதமர் தனது அமைச்சரவையின் முக்கியத் தூண்களான அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோருடன் முன் வரிசையில் அமர்ந்திருந்தார். அடுத்த ஆண்டு நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அவருக்குப் பின்னால் வரிசையாக இருந்த பாஜக எம்.பி.க்கள் கைதட்டி, மூன்றாவது முறையாக அவர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆரவாரம் செய்தனர்.
பாஜக சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் எந்த முதலமைச்சர் முகத்தையும் முன்னிறுத்தாமல், பிரதமர் மோடியை மட்டுமே கட்சியின் முகமாக முன்னிறுத்தி போட்டியிட்டது.
மத்திய இந்தியாவின் மூன்று மாநிலங்களுக்கும், தெற்கு இந்தியாவில் ஒரு மாநிலத்திற்கும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, அடுத்த நாள் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியைத் தக்கவைத்தது மட்டுமல்லாமல், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரசை வீழ்த்தியது.
எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். குறிப்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி டேனிஷ் அலியை பாஜக எம்பி ரமேஷ் பிதுரி அவதூறாகப் பேசியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பிஎஸ்பி உறுப்பினர் டேனிஷ் அலி போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து மக்களவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.
குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் சபை கூடியதும், சபாநாயகர் ஓம் பிர்லா முதலில் இரங்கல் குறிப்புகளை வாசித்தார்.