Lok Sabha Bill : தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா மக்களவையில் நிறைவேற்றம்.. அதிரடி மாற்றங்கள் என்னென்ன?

தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் இருந்து இந்திய தலைமை நீதிபதியை நீக்குவதற்கு இந்த மசோதா வழிவகை செய்கிறது. 

Continues below advertisement

நீதிபதிகள் நியமனம் தொடங்கி ஆளுநர் விவகாரம் வரை மத்திய அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை நியமிக்காமல் மத்திய அரசு தாமதம் செய்து வருவதாக உச்ச நீதிமன்றமும், கொலீஜியம் அமைப்பு வெளிப்படை தன்மையற்று இருப்பதாக மத்திய அரசும் குற்றஞ்சாட்டி வந்தன.

Continues below advertisement

தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதாவால் அதிரடி மாற்றங்கள்:

இந்த நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த சட்ட மசோதா ஒன்று மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் இருந்து இந்திய தலைமை நீதிபதியை நீக்குவதற்கு இந்த மசோதா வழிவகை செய்கிறது. 

ஜனநாயகத்தின் முக்கிய அங்கமான தேர்தலை நடத்தும் பொறுப்பு இந்திய தேர்தல் ஆணையத்திடமே உள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும் கண்காணிப்பிலும்தான் நாடாளுமன்ற, சட்டப்பேரவை, குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர் பதவிகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படுகிறது.

மாநகராட்சி, பஞ்சாயத்து தேர்தலுக்கும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஏன் என்றால், உள்ளாட்சி தேர்தலை நடத்தும் பொறுப்பு தனியாக இயங்கும் மாநில தேர்தல் ஆணையத்திடம் உள்ளது.

தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?

கடந்த 1950ஆம் ஆண்டு, இந்திய தேர்தல் ஆணைம் அமைக்கப்பட்டதில் இருந்து 1989ஆம் ஆண்டு வரை, இது ஒரு உறுப்பினர் கொண்ட அமைப்பாகவே இருந்தது. ஆனால், 1989ஆம் ஆண்டுக்கு பிறகு, மேலும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டு இந்திய தேர்தல் ஆணையம் மூன்று பேர் கொண்ட அமைப்பாக மாற்றப்பட்டது.

இருப்பினும், நடுவில் மீண்டும் ஒரு உறுப்பினர் கொண்ட அமைப்பாக மாற்றப்பட்டு பின்னர் மீண்டும் மூன்று பேர் கொண்ட அமைப்பாக மாற்றி அமைக்கப்பட்டது. தலைமை தேர்தல் ஆணையர், இரண்டு தேர்தல் ஆணையர்கள் ஆகியோர் பிரதமரின் பரிந்துரையில் குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்டு வந்தனர்.

இதற்கிடையே, தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுவதில் சீர்திருத்தம் கோரி பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த அரசியல் சாசன அமர்வு, "பிரதமர், மக்களவை எதிர்கட்சி தலைவர் (அல்லது தனிப்பெரும் எதிர்க்கட்சியின் தலைவர்), இந்திய தலைமை நீதிபதி ஆகிய மூன்று பேர் கொண்ட கமிட்டி வழங்கும் பரிந்துரையின் பேரில் குடியரசு தலைவர் தேர்தல் ஆணையர்களை நியமிப்பார்" என தெரிவித்தது. நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக சட்டம் இயற்றும் வரை, இந்த நடைமுறையே தொடரும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இச்சூழலில், தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா, 2023, மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, "பிரதமர், எதிர்கட்சி தலைவர் (அல்லது தனிப்பெரும் எதிர்க்கட்சியின் தலைவர்), பிரதமரால் நியமிக்கப்படும் மத்திய அமைச்சர் ஆகிய மூன்று பேர் கொண்ட கமிட்டி வழங்கும் பரிந்துரையின் பேரில் தேர்தல் ஆணையர்களை குடியரசு தலைவர்  நியமிப்பார். இந்த கமிட்டிக்கு பிரதமர் தலைமை தாங்குவார்" 

Continues below advertisement