அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க எதிர்கட்சிகள் கூட்டணி அமைக்க வியூகம் வகுத்துவரும் நிலையில் எதிர்க் கட்சிகளுக்குள் பூகம்பம் வெடிக்கத் தொடங்கியுள்ளது.


2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் ஆளும் பாஜக அரசை அகற்றுவதற்காக இந்தியா முழுவதும் உள்ள எதிர்கட்சிகள் மெகா கூட்டணி அமைக்க திட்டமிட்டு வருகின்றன. பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த மாதம் எதிர்கட்சிகளின் முதல் கூட்டம் நடைபெற்ற நிலையில், இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் இம்மாதம் நடைபெறும் என்றும் இக்கூட்டத்தை காங்கிரஸ் நடத்தும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், பாஜகவுக்கு எதிராக திரளும் கட்சிகளுக்குள் பூகம்பம் வெடிக்கத்தொடங்கியுள்ளதோடு, எதிர்கட்சிகள் மீதான முறைகேடு விசாரணைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.




சிவசேனா & தேசியவாத காங்கிரஸ்:


மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி என்ற கூட்டணி அமைய காரணமக இருந்தவார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளை கூட்டணி சேர்த்து தேர்தலை சந்தித்து உத்தவ் தாக்கரேவை அரியணை ஏற்றினார். ஆனால், சிவசேனாவிற்குள் ஏற்பட்ட பிளவு காரணமாக உத்தவ் தாக்கரே பதவியிழந்தார். ஏக்னாத் ஷிண்டே சிவசேனாவை உடைத்து முதலமைச்சரானார். இந்தநிலையில், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் உடைத்து அஜித் பவார் வெளியேறி மகாராஷ்டிராவின் துணைமுதலமைச்சராகியுள்ளார். அஜித் பவார், அவரது மனைவி ஆகியோர் மீது சர்க்கரை ஆலை முறைகேடு தொடர்பாக விசாரித்தது.


ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் குற்றப்பத்திரிகையில் இருந்து இருவரது பெயரையும் திடீரென்று நீக்கியது. அதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து அஜித் பவார் வெளியேறப்போகிறார் என்று செய்திகள் வெளியான நிலையில், சரத்பவார் திடீரென்று கட்சிப்பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அஜித் பவார் கட்சித்தலைவர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொண்டர்களின் தொடர்போராட்டம் காரணமாக அந்த முடிவை கைவிட்ட சரத்பவார் மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.


இதனையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் வெளியேறி ஷிண்டே அணியுடன் இணைந்து மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். அவரது ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. அஜித் பவாருடன் சென்றவர்களில் 4 பேர் மீது அமலாக்கத்துறை விசாரணை நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.




ராஸ்ட்ரிய ஜனதா தளம்:


எதிர்கட்சிகள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. லாலு குடும்பத்தின் மீது அடுக்கடுக்கான முறைகேடு புகார்களை அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் கூறி வரும் நிலையில், நிலத்திற்கு வேலை திட்டத்தின் மீதான விசாரணையை தூசு தட்டியுள்ளது சிபிஐ. லாலுபிரசாத் யாதவ் 2004 முதல் 2009 வரை மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த போது நிலம் கொடுப்பவர்களுக்கு ரயில்வேயில் வேலை என்ற அறிவிப்பின் கீழ் நிலம் கையகப்படுத்தப்பட்டதில்- முறைகேடு நடந்திருப்பதாகவும், இந்த முறைகேட்டில் லாலுபிரசாத்த்தின் குடும்பத்தினருக்கு தொடர்பிருப்பதாகவும் சிபிஐ குற்றம்சாட்டியது. அதன் அடிப்படையில் கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி, இரண்டு மகள்கள் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்தது. அதே நேரம் அமலாக்கத்துறை விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நிலம் கொடுப்பவர்களுக்கு வேலை என்று கூறு சுமார் 4000 பேருக்கு வேலை அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் லாலுபிரசாத், ராப்ரி தேவி, மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மீது புதிய குற்றப்பத்திரிகையை கடந்த ஜூன் 3ம் தேதி திங்கள் கிழமை அன்று சிபிஐ தாக்கல் செய்துள்ளது. இதனையடுத்து தேஜஸ்வி யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது.




திரிணாமுல் காங்கிரஸ்:


பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக எதிர்ப்பவர்களில் முக்கியமானவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி. ஆசிரியர் நியமன ஊழல் புகாரில் இக்கட்சியின் நிர்வாகிகள் தற்போது அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்தில் உள்ளனர். 2014 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் குரூப் சி மற்றும் குரூப் டி தேர்வுகள் மற்றும் ஆசிரியர் நியமன தேர்வுகளில் தோல்வியடைந்தவர்கள் 5 முதல் 15 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக்கொண்டு வேலை வழங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததன் பேரில் இதனை விசாரிக்க சிபிஐ உத்தரவிட்டது. இதனையடுத்து, மம்தாவின் உறவினரான அபிஷேக் பானர்ஜி, அவரது மனைவி மற்றும் சாயோனி கோஷ்  ஆகியோரை அமலாகக்த்துறை விசாரித்து வருகிறது. கடந்த மே மற்றும் ஜூன் ஆகிய மாதங்களில் அபிஷேக்கை சுமார் 10 மணி நேரத்திற்கும் மேல் விசாரித்த நிலையில், சாயோனி கோஷை கடந்த வெள்ளிக்கிழமையன்று சுமார் 11 மணி நேரம் அமலாகக்த்துறை விசாரணை நடத்தியிருக்கிறது. அமலாக்கத்துறை விசாரணை மூலம் மம்தா அரசுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.


ஆம் ஆத்மி:


அதேபோல டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலும் கடும் நெருக்கடியில் உள்ளார். டெல்லியின் துணை முதலமைச்சராக மணீஷ் சிசோடியா பணியாற்றிய காலத்தில் கலால் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டது. இந்த மாற்றங்கள் மூலம் பெரும் ஊழல் நடந்துள்ளதாக சிபிஐ சிசோடியா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தது. இந்த வழக்கில் சிறையில் இருந்துவரும் அவருக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்து வருகிறது. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய இரண்டு அமைப்புகளுமே வழக்குத் தொடர்ந்துள்ளது. ஏற்கனவே சிபிஐ தொடர்ந்துள்ள வழக்கில் ஜாமீன் மறுத்த நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் மணீஷ் சிசோடியாவுக்கு நேற்று நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.  அதேபோல, கெஜ்ரிவால் அரசில் அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின் மீதும் அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்று வருகிறது, கடந்த மே மாதம் சத்யேந்திர ஜெயினை அமலாகக்த்துறை கைது செய்த நிலையில் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து சத்யேந்திர ஜெயினுக்கு 6 வாரகாலம் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஜாமீன் காலம் இந்த வாரத்துடன் முடிவுக்கு வரும் நிலையில் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. அதோடு, டெல்லியில் உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கான அதிகாரத்தை துணை நிலை ஆளுநரிடம் வழங்கும் வகையில் அவசர சட்டத்தை மத்திய அரசு கடந்த மே 19-ம் தேதி பிறப்பித்தது. இது தொடர்பாகவும் கெஜ்ரிவால் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறார்.


திமுக:


2011 முதல் 2016 வரையிலான ஜெயலிதா தலைமையிலான ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில்பாலாஜி பதவி வகித்தார். அப்போது பணம் பெற்றுக்கொண்டு போக்குவரத்துத்துறையில் பணி நியமனம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஏற்கனவே இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு விசாரித்து வந்த நிலையில்,  செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை ஆகியவை சோதனை நடத்தின. சோதனையின் முடிவில் செந்தில்பாலாஜியை அமலாகக்த்துறை கைது செய்தது. அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்துவருகிறார். செந்தில்பாலஜியை கைது செய்து விசாரணை செய்ய அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதிட்டு வருகிறது. செந்தில்பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் நீதிபதிகள் இருவேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளதால், இவ்வழக்கு 3வது நீதிபதி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. காவேரி மருத்துவமனையில் இன்னும் பத்து நாள்கள் மட்டுமே செந்தில்பாலாஜி இருக்க முடியும் என்றும் அதன்பிறகு தேவைப்பட்டால் அவர் சிறை மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடரும் நிலையில் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம்


இந்த வரிசையில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தான் என்று நேரடியாகவே சொல்லியிருக்கிறார் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே. பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைகளில் தீவிரம் காட்டியது நிதிஷ் தான். அதனால் தான் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. இந்நிலையில், நிதிஷ் குமாரின் கட்சியிலேயே கலகம் பிறக்கும் என்று மத்திய அமைச்சர் நேரடியாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பேசியுள்ள அவர், “பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைந்து செயல்படுவதை விரும்பவில்லை என்றும், மேலும், ராகுல் காந்தியை நிதிஷ்குமார் தலைவராக கொண்டாடுவதை எம்எல்ஏக்களும், மூத்தத் தலைவர்களும் விரும்பவில்லை. அதனால் விரைவில் பீகாரிலும் மகாராஷ்டிராவில் நடந்தது போன்று நடக்கலாம் என்று கூறியுள்ளார். தன் கட்சியிலும் பாஜகவால் கலகம் பிறக்கும் என்பதை நிதிஷ் குமார் அறிந்தே இருப்பதாகவும், அதனால் எம்எல்ஏக்களை தனித்தனியே அழைத்து அவர் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.


சமாஜ்வாதி கட்சி


அதேபோல உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவுடன் மோதும் ராஸ்ட்ரிய லோக் தள் தலைவர் ஜெயந்த் சவுத்ரி பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சிகள் கூட்டத்திற்குச் எல்லவில்லை. அவர் விரைவில் பாஜக கூட்டணியில் இணைவார் என்று அத்வாலே கூறியுள்ளார். எனினும் ஜெயந்த் சவுத்ரி இதனை மறுத்துள்ளதோடு, எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டத்தில் கலந்துகொள்வேன் என்றும் கூறியுள்ளார்.