நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 543 தொகுதிகளுக்கு மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில்,  முதற்கட்டமாக கடந்த 19ம் தேதி தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 70 சதவீதத்திற்கும் கீழ் தான் வாக்குப்பதிவு இருந்தது.


இதனை தொடர்ந்து இன்று 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரபிரதேசம், மேற்குவங்கம் மற்றும் ஜம்மு & காஷ்மீர்  ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நேற்று முன் தினம் மாலை 6 மணிக்கு முடிவுக்கு வந்தது.






இன்று காலை 7 மணி முதல் 88 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மும்மரமாக நடைபெற்று வருகிறது. அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கன்னூரில் இருக்கும் வாக்குச்சாவடியில் குடும்பத்தினருடன் வருகை தந்து வாக்களித்தார்.






நடிகை நேஹா சர்மா வாக்களித்த பின் செய்தியாளரை சந்தித்த போது, “இன்று மிக முக்கியமான நாள், அனைவரும் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.


மத்திய நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பெங்களூருவில் இருக்கும் வாக்குச்சாவடியில் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.






அதேபோல் நடிகர் பிரகாஷ் ராஜ் வாக்குப்பதிவுக்கு பின் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ மாற்றத்தஒ நோக்கி எனது வாக்கினை பதிவு செய்துள்ளேன், வெறுப்புவாதத்திற்கு எதிராக எனது வாக்கினை பதிவு செய்துள்ளேன், நீங்களும் உங்களது வாக்கினை பதிவு செய்யுங்கள்” என தெரிவித்துள்ளார்.






கேரளா மாநிலம் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி திருச்சூரில் இருக்கும் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார். மேலும் மலையாள நடிகர் டொவினோ தாமஸ் தனது வாக்கினை இரிஞாளக்குடா பகுதியில் இருக்கும் வாக்குச்சாவடியில் பதிவு செய்தார்.