பீகார் அரசியல் களத்தில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அங்கு உள்ள லோக் ஜனசக்தி கட்சியில் புதிய குழப்பம் தொடங்கியுள்ளது. அந்தக் கட்சியின் நிறுவனரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பஸ்வான் கடந்த அக்டோபர் மாதம் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். அதன்பின்பு அவருடைய மகன் சிராக் பஸ்வான் கட்சிக்கு தலைமை ஏற்று கட்சியை நடத்தி வந்தார். எனினும் கடந்த சில நாட்களாக உட்கட்சி பூசல் அதிகமாக தொடங்கியிருந்தது.
இந்நிலையில் தற்போது அந்தக் கட்சியின் மக்களவை எம்பிக்கள் தங்களது கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்துள்ளனர். மக்களவையில் லோக் ஜனசக்தி கட்சிக்கு சிராக் பஸ்வான் உடன் சேர்த்து 6 எம்பிக்கள் உள்ளனர். இவர்களில் 5 எம்பிக்கள் ஒன்றாக சேர்ந்து தற்போது சிராக் பஸ்வானை கட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்க முற்பட்டுள்ளனர். தற்போது மக்களவையின் கட்சி தலைவராக உள்ள சிராக் பஸ்வானை நீக்கிவிட்டு பசுபதி குமார் பாராஸை தங்களுடைய தலைவராக எம்பிகள் தேர்வு செய்துள்ளனர். இது தொடர்பாக இன்று எம்பிக்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்திக்க உள்ளனர்.
இந்த திடீர் முடிவு குறித்து பசுபதி குமார்,"நான் கட்சியை உடைக்கவில்லை. காட்சியை காப்பாற்ற தான் போகிறேன். ஏனென்றால் எங்கள் கட்சியின் 5 எம்பிகளும் இதை தான் விரும்புகிறார்கள். மற்றபடி எங்களுக்கும் சிராக் பஸ்வானுக்கும் எந்தவித பிரச்னையும் இல்லை" எனத் தெரிவித்தார். கடந்த 2020ஆம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தலில் லோக் ஜனசக்தி ஜனதா தளம் கூட்டணியிலிருந்து வெளியேறியது. அப்போது இந்த முடிவு சிராக் பஸ்வான் எடுத்தார். அதன்பின்பு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் லோக் ஜனசக்தி 135 இடங்களில் போட்டியிட்டது. அதில் ஒரு இடங்களில் கூட அந்தக் கட்சி வெற்றி பெறவில்லை.
இந்த முடிவை பல தலைவர்கள் பெரும் பின்னடைவாக கருதினர். இதன் காரணமாக அப்போது முதல் அந்தக் கட்சியில் உட்கட்சி பூசல் நிலவி வந்தது. தற்போது அது வெடித்து பெரிதாக தொடங்கியுள்ளது. இது கட்சித் தலைவர் சிராக் பஸ்வானுக்கு பெரிய நெருக்கடியாக அமைந்துள்ளது. மேலும் நீண்ட நாட்களாக சிராக் பஸ்வானின் செயல்பாடு பிடிக்காத காரணத்தில் தான் எம்பிக்கள் இந்த முடிவு எடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பீகாரில் 2000ஆம் ஆண்டு ஜனதா தளம் கட்சியிலிருந்து பிரிந்து வந்து ராம்விலாஸ் பஸ்வான் லோக் ஜனசக்தி என்ற கட்சியை தொடங்கினார். அப்போது முதல் அவர் தலைமையில் இந்தக் கட்சி செயல்பட்டு வந்தது. கடந்த அக்டோபர் மாதம் ராம் விலாஸ் பஸ்வானின் மறைவிற்கு பிறகு அவருடைய மகன் சிராக் பஸ்வான் கட்சியை வழிநடத்துவார் என்று கருதப்பட்டது. இந்தச் சூழலில் தற்போது அவர் மீது கட்சியினர் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் மக்களவை கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பசுபதி குமார் பாராஸ் ராம்விலாஸ் பஸ்வானின் சொந்தக்காரர். எனவே இது ஒரு குடும்ப அரசியல் பிரச்னையாகவும் வலம் வர தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: 10 லட்சத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா சிகிச்சை எண்ணிக்கை