பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த குல்சா குமாரி மற்றும் குர்வீந்தர் சிங் இருவரும் நான்கு வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். குல்சாவுக்கு வயது 19 மற்றும் குர்வீந்தருக்கு வயது 22. பெற்றோர் சாதி மறுப்புத்திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு அண்மையில் வெளியேறிய இருவரும் அந்த மாநிலத்தின் தாம்தாரி மாவட்டத்தில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையே குல்சா குமாரியின் பெற்றோரால் தங்களுக்கு ஆபத்து என்றும் அதனால் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் இணையர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் பஞ்சாப் மாநிலக் காவல்துறையை அணுகியுள்ளனர். எனினும் அவர்களது பெற்றொரிடமிருந்து தொடர்ந்து மிரட்டல் வந்த நிலையில் மாநில உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்கள்.
கடந்த 11 மே அன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மதான் தலைமையிலான அமர்வு,’மனுதாரர்களான குல்சா குமாரி மற்றும் குர்வீந்தர் இருவரும் இந்த மனுவின் மூலம் தங்களுக்குப் பாதுகாப்பு கேட்பதன் வழியாகத் தாங்கள் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வதை அங்கீகரிக்கச் சொல்லிக் கேட்கிறார்கள். ஆனால் அது சமூகத்துக்கும் ஒழுக்கத்துக்கும் புறம்பானது.அதனால் மனுவில் கோரப்படும் பாதுகாப்பை வழங்கமுடியாது’ எனத் தீர்ப்பளித்துள்ளார்.
’சாதியின் காரணமாக இணையர்கள் இருவரது காதல் உறவை குல்சாவின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளாததால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி வாழ்ந்து வருகின்றனர். மேலும் குல்சாவின் பெற்றோரிடம் அவரது ஆவணங்கள் முழுவதும் இருப்பதால் இவர்களால் திருமணம் செய்துகொள்ள முடியவில்லை’ என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்துள்ள நீதிமன்ற அமர்வு, ‘திருமணம் செய்யவில்லை என்று சொல்வதே ஒழுக்கமற்றதுதான். ஒழுக்கமற்றது என்னும்போது அது சட்டத்துக்குப் புறம்பானதும் கூட’ என பதிலளித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வலுத்த விமர்சனத்தைச் சந்தித்து வருகிறது.
மேலும் ஆறு நாட்களுக்கு முன்னர்தான் அந்த மாநில உயர்நீதிமன்ற நீதிபதி அனில் ஷேத்ரபால்,’இப்படியான திருமணம் செய்யாத உறவுமுறையை அங்கீகரித்தால் சமூகத்தின் கட்டமைப்பே நொறுங்கிவிடும்’ எனச் சொல்லி வேறொரு மனுவை நிராகரித்திருந்தார்.
இதே பஞ்சாப் நீதிமன்றம்தான் ஒருவருடத்துக்கு முன்பு,’பிள்ளைகள் எப்படி வாழவேண்டும் என்பதைப் பெற்றோர்கள் தீர்மானிக்க முடியாது’ எனச் சொல்லி திருமணமற்ற உறவுமுறை ஒன்று தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
திருமணமற்ற உறவு முறை குறித்து ஏற்கனவே பல்வேற மாநில உயர்நீதிமன்றங்கள் வெவ்வேறு விதமான தீர்ப்புகளையும், கருத்துக்களையும் வழங்கியுள்ளன. உச்சநீதிமன்றத்திலும் கூட இது தொடர்பான வழக்குகள் சென்றள்ளது. ஆனாலும் இந்த விவகாரத்தில் மாறுபட்ட தீர்ப்புகளே வருகிறது. நிலையான ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டதால் தான் இந்த விவாரத்தில் ஒரு தீர்ப்பு கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு பெற்றோரிடத்தில் உள்ளது. அதற்கு அரசு ஆவணம் செய்யலாம் என்றும் பலர் கோரிக்கை வைக்கின்றனர்.