Richest Lok Sabha Members: 18வது மக்களவை தேர்தல் முடிந்த நிலையில், மாநில கட்சியை சேர்ந்த ஒருவர் பணக்கார எம்.பிக்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.


பணக்கார எம்.பிக்கள் - டாப் 10 லிஸ்ட்:


நாட்டின் 18வது மக்களவை தேர்தல் முடிந்த நிலையில், நரேந்திர மோடி தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில்,  18வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 543 எம்.பி.க்களில் 503 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். இவர்கள் அனைவருக்கும் குறைந்தது ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. இவர்களில் அதிக சொத்துகளை கொண்ட டாப் 10 எம்.பிக்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த சொத்து மதிப்புகள் அவர்களது வேட்புமனுக்களில் இருந்த தரவுகளின் அடிப்படையில் குறிப்பிடப்படுகிறது.


10. டாக்டர் பிரபா மல்லிகார்ஜுன்:


காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டாக்டர் பிரபா மல்லிகார்ஜுன், கர்நாடகாவின் தேவனகரே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பல் மருத்துவரான பிரபா மல்லிகார்ஜுன், கர்நாடக அமைச்சர் எஸ்.எஸ்.மல்லிகார்ஜூனின் மனைவியாவார். இவரது சொத்து மதிப்பு ரூ.241 கோடி.


09. ஹேமமாலினி  பாலிவுட் நடிகை:


நடிகை ஹேமமாலினி உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் பாஜக சார்பில் தொடர்ந்து மூன்றாவது முறையாக களமிறங்கி வெற்றி பெற்றார் . இவரது சொத்து மதிப்பு ரூ.278 கோடி.


08.மதுகுமில்லி ஸ்ரீபரத்:


விசாகப்பட்டினம் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மதுகுமில்லி ஸ்ரீபரத். இவரது சொத்து மதிப்பு ரூ.298 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மென்ட்டின் தலைவராகவும் உள்ளார்.


07. சத்ரபதி ஷாஹு மஹாராஜ்:


சத்ரபதி ஷாஹுஜி மகாராஜ் கோலாப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது சொத்து மதிப்பு ரூ.342 கோடி. மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவின் கோலாப்பூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.


06. ஜோதிராதித்ய சிந்தியா:


இந்திய அரசியலில் நன்கு அறியப்பட்ட பெயரான ஜோதிராதித்ய சிந்தியா, நீண்ட காலமாக காங்கிரஸில் இருந்து வந்தார். மத்தியப் பிரதேசத்தில் குணா தொகுதியில் வெற்றி பெற்ற இவரது சொத்து மதிப்பு ரூ.424 கோடி ஆகும். மோடி 2.0 அரசில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றிய ஜோதிராதித்ய சிந்தியா இம்முறை தொலைத்தொடர்பு அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.


05. சி.எம்.ரமேஷ்:


பாஜக தலைவர் சி.எம்.ரமேஷ் முன்னதாக ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக பணியாற்றினார். இந்த முறை அவர் அனகாப்பள்ளி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக தெலுங்கு தேசம் கட்சியில் உறுப்பினராக இருந்த இவரது சொத்து மதிப்பு ரூ.497 கோடி ஆகும்.


04. வெமிரெட்டி பிரபாகர் ரெட்டி :


VPR மைனிங் இன்ஃப்ராவின் நிறுவனரான வெமிரெட்டி பிரபாகர் ரெட்டியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.716 கோடி. இவர் நெல்லூர் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 18வது மக்களவையில் பணக்கார எம்பிக்களின் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தார்.


03. நவீன் ஜிண்டால்:


இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரப் பெண்மணியான சாவித்திரி ஜிண்டாலின் மகன் நவீன் ஜிண்டால், குருக்ஷேத்ரா தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கி வெற்றி கண்டார். ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் நிறுவனத்தின் தலைவரான நவீன் ஜிண்டாலின் சொத்து மதிப்பு ரூ.1,241 கோடி. 


02. கொண்டா விஸ்வேஷ்வர் ரெட்டி:


கொண்டா விஸ்வேஷ்வர் ரெட்டி தெலுங்கானாவில் உள்ள செல்லெல்லா தொகுதியில் இருந்து பாஜக சார்பில் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2014 மக்களவைத் தேர்தலிலும் அதே தொகுதியில் இருந்து பிஆர்எஸ் (முன்னாள் டிஆர்எஸ்) கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் கோண்டா விஸ்வேஷ்வர் ரெட்டி தனது சொத்து மதிப்பு ரூ.4,568 கோடி என தெரிவித்துள்ளார்.


01. டாக்டர் பெம்மாசானி சந்திர சேகர்


குண்டூர் மக்களவைத் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மோடி அரசில் ஊரக வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் பொறுப்பை ஏற்றார். தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, இந்த எம்.பி.யின் சொத்து மதிப்பு ரூ.5705 கோடி. 18வது மக்களவையில் பணக்கார எம்பிக்களின் பட்டியலில் முதலிடத்தை இவர் பிடித்துள்ளார்.