2021ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த நவம்பர் 09 அன்று டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த விருதுகளை வழங்கினார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மூத்த சிற்பக் கலைஞர் சுதர்சன் சாஹூ, மக்களவை முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் ஆகியோர் இன்று பத்ம விருதுகளைப் பெற்றுள்ளனர். 


கலைகள் பிரிவில் வாழ்நாள் சாதனைக்காக ஒடிசாவைச் சேர்ந்த மூத்த சிற்பக் கலைஞர் சுதர்சன் சாஹூ பத்ம விபூஷண் விருதைப் பெற்றுக் கொண்டார். கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மூத்த மருத்துவரும் கல்வியாளருமான பெல்லே மோனப்பா ஹெக்டே, தொல்லியல் துறையின் மூத்த ஆய்வாளர் பி.பி லால் ஆகியோரும் பத்ம விபூஷன் விருதுகளைப் பெற்றுள்ளனர். 


இந்தியாவின் முதல் எட்டு முறை நாடாளுமன்ற உறுப்பினர் சுமித்ரா மஹாஜன், மூத்த ஐஏஎஸ் அதிகாரி நிரிபேந்திரா மிஸ்ரா ஆகியோருக்கு பொது விவகாரம், குடிமைப் பணி ஆகியவற்றில் சிறந்த பங்களிப்புக்காக பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. அசாம் மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் தருண் கோகோய்க்கு அவரது மறைவுக்குப் பின் மரியாதை செலுத்தும் நிமித்தமாக பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அவரது மனைவி பெற்றுக் கொண்டார். 



`பத்ம விருதுகள் 2021’ பெற்றவர்கள்


 


அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சமூக சேவகர் லகிமி பாருவா, ஹரியானா மாநிலத்தின் குருக்‌ஷேத்ராவைச் சேர்ந்த இந்தி மொழி இலக்கியவாதியும், பேராசிரியருமான ஜெய் பகவான், கோயல், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மாங்கணியார் இன நாட்டுப்புறப் பாடகர் லகா கான், புகழ்பெற்ற கர்னாடக இசைப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, டெஹ்ராடூன் பகுதியைச் சேர்ந்த மூத்த எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் பூபேந்திர குமார் சிங் சஞ்சப், ஸ்ரீநகரைச் சேர்ந்த இந்தி பேராசிரியரும், பத்திரிகையாளருமான சமன் லால் சப்ரூ ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 


டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு ஸ்ரீநிவாசன் வர்த்தகம், தொழில் ஆகிய துறைகளில் மேற்கொண்ட பங்களிப்புக்காகவும், தென்னிந்தியாவின் கிராம வளர்ச்சிக்கான அவரது பங்களிப்புக்காகவும் அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. 


தமிழ்நாட்டின் கோவையைச் சேர்ந்த இயற்கை விவசாயி ரங்கம்மாள், ராஜஸ்தானைச் சேர்ந்த பாலி மொழி எழுத்தாளர் அர்ஜுன் சிங் ஷெகாவத், சமஸ்கிருத இலக்கணப் புலவர் ராம் யத்ன சுக்லா, டெல்லியைச் சேர்ந்த சமூக சேவகர் ஜிதேந்தர் சிங் ஷுண்டி, ஓட்டப் பந்தய வீராங்கனை சுதா சிங், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சமூக சேவகர் குரு மா கமலி சோரன், போபாலைச் சேர்ந்த பழங்குடி கலாச்சார ஆய்வாளார் கபில் திவாரி ஆகியோருக்கும், பீஹாரைச் சேர்ந்த இந்தி மொழியில் பங்களிப்பு செய்த மறைந்த மூத்த எழுத்தாளர் மிருதுளா சின்ஹா, தமிழ்நாட்டின் கோவையைச் சேர்ந்த மறைந்த தொழிலதிபர் பி.சுப்ரமணியன் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 



ரங்கம்மாள்


 


இந்தியாவின் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் கே.ஒய்.வெங்கடேஷ், வங்காள தேச விடுதலைப் போரில் பங்கேற்ற மூத்த ராணுவ வீரர் காஸி சஜ்ஜாத் அலி ஜாஹிர் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 


பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா முதலானோர் கலந்துகொண்டனர்.