கர்நாடக மாநிலத்தில் மைசூரு - பெங்களூரு இடையே இயக்கப்படும் திப்பு எக்ஸ்பிரஸை உடையார் எக்ஸ்பிரஸாக ரயில்வே பெயர் மாற்றியுள்ளது. அதேபோல, மைசூருவில் இருந்து தலகுப்பா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கவிஞர் குவேம்புவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.


 






ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு மைசூரு எம்பி பிரதாப் சிம்ஹா சில மாதங்களுக்கு முன் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். சிம்ஹா தனது கடிதத்தில், அப்போதைய சமஸ்தானமான மைசூரில் ரயில்வேயின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கு உடையார்களின் பங்களிப்பை எடுத்துரைத்தார்.


அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு, இதற்கான அறிவிப்பை ரயில்வே வாரியம் நேற்று வெளியிட்டது. மேலும் ரயிலின் பெயர் மாற்ற உத்தரவு சனிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.


இது முஸ்லிம் ஆட்சியாளர்களின் வரலாற்றுப் பாரம்பரியத்தை சிதைக்க பெயரை மாற்றி வரும் பாஜக நடவடிக்கையின் தொடர்ச்சி என திப்பு எக்ஸ்பிரஸ் பெயர் மாற்றப்பட்டதற்கு விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. தல்குப்பா விரைவு ரயிலுக்கு குவெம்பு பெயரை மாற்றுவதில் எந்த சர்ச்சையும் எழாத நிலையில், திப்பு எக்ஸ்பிரஸ் பெயரை மாற்றியிருப்பது சர்ச்சையாக வெடித்துள்ளது.


"மாநிலத்தில் ரயில் இணைப்பை விரிவாக்க மைசூர் உடையார்கள் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. பழைய ரயிலின் பெயரை மாற்றுவதற்கு பதிலாக புதிய ரயிலுக்கு அவர்களின் பெயரை வைத்து உடையார்களுக்கு மரியாதை செய்திருக்கலாம்" என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


திப்பு சுல்தான் ஆட்சியின் போது இந்தியாவில் ரயில்வே அமைப்பே இல்லை என்றும் அதே நேரத்தில் உடையார்கள் விரைவு போக்குவரத்துக்கான வழிமுறையாக ரயில்வேயை மேம்படுத்தவும், பஞ்சத்தின் போது சரியான நேரத்தில் நிவாரணம் வழங்கவும் அதிக முதலீடு செய்தனர்" என்றும் பிரதாப் சிம்ஹா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.


திப்பு எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 15, 1980 அன்று மைசூரு மற்றும் பெங்களூருவை இணைக்கும் அதிவிரைவு ரயிலாக தொடங்கப்பட்டது. மேலும், இந்த ரயில் இரண்டு நகரங்களுக்கு இடையேயான 139 கி.மீ தூரத்தை 3.15 மணி நேரத்தில் ஒற்றை வரி மீட்டர் கேஜ் பாதை வழியாக இணைக்கிறது.


கர்நாடகா மாநில எல்லைக்குள் வரும் மைசூரு பகுதியில் 1700 காலகட்டத்தில் ஆட்சி செய்த அரசர் திப்புசுல்தான் அவருடைய ஆட்சிக் காலத்தில் பல நல்ல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


கர்நாடகாவில் கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 10 ஆம் தேதி திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. ஆனால், பாஜக அரசு அங்கு ஆட்சி அமைத்ததை அடுத்து அது ரத்து செய்யப்பட்டது.