குடும்ப அமைப்புகள் வலுவாக உள்ள இந்தியாவில் அதன் தாக்கம் அரசியலிலும் எதிரொலிப்பது வழக்கமான நடைமுறைகளில் ஒன்றாகவே உள்ளது, அந்த அடிப்படையில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அரசியல்வாதிகளுக்கு வாரிசாக பிறந்து, முதலமைச்சர் ஆனவர்களை தற்போது பார்க்கலாம்


காஷ்மீர்



காஷ்மீர் சிங்கம் என அழைக்கப்படு ஷேக் அப்துல்லா, காஷ்மீரில் ராஜா ஹரி சிங்கின் ஆட்சிக்கு எதிராக போராடி தன்னாட்சி அமைய பாடுபட்டவர். விடுதலைக்கு பிறகு தேசிய மாநாட்டு கட்சி சார்பில் போட்டியிட்டு காஷ்மீர் பிரதமராக இருந்த ஷேக் அப்துல்லா, 1953ஆம் ஆண்டில் அப்பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள கொடைக்கானலில் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டிருந்தார். பின்னர் 1974ஆம் ஆண்டில் பிரதமர் இந்திரா காந்தியுடன் செய்து கொண்ட உடன்பாடு காரணமாக சிறையில் இருந்து வந்து 1975-ஆம் ஆண்டு முதல் அவர் மரணித்த 1982-ஆம் ஆண்டு வரை காஷ்மீர் மாநில முதல்வராக இருந்தார்.


ஃபரூக் அப்துல்லா


காஷ்மீர் சிங்கம் என அழைக்கப்பட்ட ஷேக் அப்துல்லாவின் மகனான உமர் அப்துல்லா 1982 ஆம் ஆண்டு தொடங்கி வெவ்வேறு காலகட்டங்களில் மூன்று முறை காஷ்மீர் மாநில முதல்வராகவும், 2009-14 வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையின் அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். 


உமர் அப்துல்லா


காஷ்மீர் முதல்வராக இருந்த பரூக் அப்துல்லாவின் மகனான உமர் அப்துல்லா கடந்த 2009-ஆம் ஆண்டில் காஷ்மீர் மாநில முதல்வராக பொறுப்பு வகித்தவர். அதற்கு முன்னதாக வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் வெளியுறவுத்துறை இணையமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.


முஃப்தி முகமது சயீத்



காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியில் இருந்து அரசியல் வாழ்க்கையை தொடங்கிய முஃப்தி முகமது சயீத், 1989இல் அமைந்த வி.பி.சிங். அரசில் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தபோது, இந்தியாவின் முதல் முஸ்லீம் உள்துறை அமைச்சர் என்ற பெயரினை பெற்றார். 1999ஆம் ஆண்டு மெஹ்பூபா முஃப்தி உடன் இணைந்து ஜனநாயக கட்சியை தொடங்கி 2002 முதல் 2005ஆம் ஆண்டு வரை காஷ்மீர் முதல்வராக இருந்தார்.


மெஹ்பூபா முஃப்தி


காஷ்மீர் முதல்வராக இருந்த முஃப்தி முகமது சயீத்தின் மகளான மெஹ்பூபா முஃப்தி, பாஜக கூட்டணியில் காஷ்மீரின் முதல் பெண் முதல்வராக 2016 முதல் 2018 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.


ஹரியானா



ஹரியானாவில் ஜனதாதளம் கட்சி சார்பில் 1977 முதல் 1979 வரையிலும், பின்னர் லோக்தளம் கட்சியை தொடங்கி 1987 முதல் 89 வரை முதல்வராக இருந்த தேவிலால், பின்னர் மத்தியில் அமைந்த வி.பி.சிங் தலைமையிலான ஆட்சியில் துணை பிரதமராக பொறுப்பேற்றதால், தனது மகன் ஓம் பிரகாஷ் செளதாலாவை ஹரியான முதல்வராகினார். பின்னர் ஓம் பிரகாஷ் சௌதாலா பல்வேறு கால கட்டங்களில் 4 முறை அம்மாநில முதல்வராக இருந்தார்.


ஒரிசா



விடுதலைப்போராட்ட வீரரான ஒரிசாவின் பிஜூ பட்நாயக் நேருவின் நெருங்கிய நண்பர் ஆவார். காங்கிரஸ் கட்சி சார்பில் 1961ஆம் ஆண்டு ஒரிசாவின் முதல்வரானார். பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி ஜனதா தளம் கட்சி சார்பில் 1990-இல் மீண்டும் முதல்வரானார். இவரின் மறைவுக்கு பிறகு ஜனதாளம் கட்சியில் இருந்து விலகி பிஜூ ஜனதா தளம் கட்சியை தொடங்கிய இவரது மகனான நவீன் பட்நாயக் 2000ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை தொடர்ந்து 21ஆண்டுகளாக முதலமைச்சராக உள்ளார். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது


புதுச்சேரி



புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 1964 முதல் 1968ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் இரண்டு முறை முதல்வராக இருந்தவர் வெங்கட சுப்பா ரெட்டியார், இவரது மகனான வி.வைத்தியலிங்கமும் 1996 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில் அம்மாநில முதல்வராக இருந்தார்.


உத்தர பிரதேசம்



உத்தரபிரதேச மாநிலத்தில் ஜனதாதளம் கட்சி சார்பில் 1989 ஆண்டிலும் சமாஜ்வாதி கட்சி சார்பில் 1993 மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளிலும் முலாயம் சிங் யாதவ் முதல்வராக இருந்தார். இவரது மகனான அகிலேஷ் யாதவ் 2012-17 வரை அம்மாநில முதல்வராக பதவி வகித்தார்.


ஆந்திர பிரதேசம்



நீண்ட போராட்டங்களுக்கு பிறகு ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்திய ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி 2004-09 வரை அம்மாநில முதல்வராக இருந்தார். ஹெலிகாப்டர் விபத்தில் ராஜசேகர ரெட்டி இறந்த நிலையில், கருத்து வேறுபாடுகள் காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி 2019 தொடங்கி தற்போது வரை அம்மாநில முதல்வராக இருந்து வருகிறார்.


ஜார்க்கண்ட்



ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கட்சி சார்பில் 2005, 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் முதல்வராக பொறுப்பேற்றவர் சிபுசோரன், இவரது மகனான ஹேமந்த் சோரன் 2013 மற்றும் 2019 முதல் தற்போது வரையிலும் அம்மாநில முதல்வராக பதவி வகித்து வருகிறார்.


தமிழ்நாடு



திமுக சார்பில் தமிழ்நாட்டில் 1969 முதல் 2011 ஆண்டுகளுக்கிடையே நடந்த பல்வேறு தேர்தல்களில் 5 முறை வெற்றி பெற்றி பெற்று முதல்வராக மு.கருணாநிதி பொறுப்பு வகித்தார். கருணாநிதியின் மறைவுக்கு பிறகு அவரது மகனான மு.க.ஸ்டாலின் பத்தாண்டுகளுக்கு பிறகு கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேர்தல் வெற்றி பெற்று திமுகவை ஆட்சி கட்டிலில் அமர்த்தி அதன் முதல்வராக இருந்து வருகிறார். 


கர்நாடகா


தேவகவுடா-குமாரசாமி



ஜனதாதளம் கட்சி சார்பில் 1994 முதல் 1996 வரை தேவகவுடா கர்நாடக மாநில முதல்வராக பொறுப்பு வகித்தார். பின்னர் 1996 முதல் 1997 வரை இந்தியாவின் 14ஆவது பிரதமாராகவும் தேவகவுடா பொறுப்பு வகித்தார். இவரது மகனான ஹெச்.டி.குமாரசாமி மதசாற்பற்ற ஜனதாதளம் சார்பில் 2006 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வென்று சில காலம் முதல்வராக இருந்தார்.


எஸ்.ஆர்.பொம்மை-பசவராஜ் பொம்மை 



1988ஆம் ஆண்டு தொடங்கி 1989ஆம் ஆண்டு வரை ஜனதாகட்சி சார்பில் முதல்வராக இருந்தவர் எஸ்.ஆர்.பொம்மை, இவரது கட்சியில் பிரச்னை ஏற்பட்ட நிலையில் பிரதமர் ராஜீவ் காந்தியின் பரிந்துரையின்பேரில் குடியரசுத்தலைவர் ஆர்.வெங்கட்ராமன் இவரது ஆட்சியை அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 365கீழ் கலைத்தார். ஆளுநரிடம் பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் கேட்டும் அதற்கு வாய்ப்பு தரப்படாமல் ஆட்சி கலைக்கப்பட்டதால், எஸ்.ஆர்.பொம்மை வழக்கு தொடர்ந்தார். பிரிவு 356 இல் குடியரசுத் தலைவருக்கு வழங்கப் பட்டிருக்கும் அதிகாரம் கட்டற்றதல்ல. நிபந்தனைகளுக்கும், நீதிமன்றத்தின் மேற்பார்வைக்கும் உட்பட்டது என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை எஸ்.ஆர்.பொம்மை தொடர்ந்த வழக்கில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கியது. அவரது மகனான பசவராஜ் பொம்மை பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்றைய தினம் கர்நாடக மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.