வடக்கு மற்றும் மேற்கில் உள்ள மாநிலங்களை காட்டிலும் தென் மாநிலங்களில் இறைச்சியை உட்கொள்வது அதிகமாக உள்ளது. உணர்வுகளை புண்படுத்துவதாகக் கூறி அசைவம் சாப்பிடுவதற்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. 


நவராத்திரியின்போது இறைச்சி கடைகளை மூட தெற்கு டெல்லி மேயர் முடிவெடுத்ததில் இருந்து, ராம நவமியின்போது கேன்டீன் மெனுவில் சிக்கம் இடம்பெற்றுள்ளதாகக் கூறி சில மாணவர்கள் போராட்டம் நடத்தியவதில் இருந்து, கர்நாடகாவில் மதிய உணவு திட்டத்தில் முட்டைகளை வைப்பது தொடர்பாக எழுந்த விவாதம் வரை அசைவம் சாப்பிடுவது என்பது தொடர் விவாத பொருளை கிளப்பி வருகிறது.


இந்நிலையில், இறைச்சி மற்றும் மதுபானத்தை அதிகம் எடுத்து கொள்ளும் மாநிலங்களின் பட்டியலில் தெலங்கானா முதலிடத்தில் இருப்பது தற்போது வெளியாகியுள்ள ஆய்வறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.


தெலங்கானா மாநில செம்மறி ஆடு மேம்பாட்டு கூட்டுறவு கூட்டமைப்பு லிமிடெட், மாநில அரசுக்கு சமர்பித்த ஆய்வறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தெலங்கானாவில் தேசிய ஆண்டு தனிநபர் இறைச்சி நுகர்வு 21.7 கிலோவாக உள்ளது. அதாவது, தெலங்கானாவில் உள்ள ஒரு நபர், ஒரு ஆண்டுக்கு, சராசரியாக   21.7 கிலோ இறைச்சியை உட்கொள்கிறார். மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் மது அருந்துதல் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.


தெலங்கானாவில் மதுபானம் அருந்துபவர்களின் எண்ணிக்கை தேசிய சராசரியான 17.3 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது. நாடு முழுவதும் அசைவ உணவு உண்பவர்களின் எண்ணிக்கையில் தெலங்கானாவே முதலிடத்தில் உள்ளது. 


இறைச்சி உட்கொள்ளுதல் தொடர்பான ஆய்வறிக்கை


மேலும், செம்மறி ஆடுகளின் இறைச்சிக்கான தேவை வேகமாக அதிகரித்து வருவதால், ஒரு கிலோ இறைச்சியின் விலை ரூ. 800 முதல் ரூ. 1,000 ஆக அதிகரித்துள்ளது என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தெலங்கானாவில் வசிப்பவர் ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை உணவுடன் இறைச்சியை உண்கின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளில் மாநிலத்தில் செம்மறி ஆடுகளின் இறைச்சி உற்பத்தி மற்றும் விற்பனை 9.75 லட்சம் டன்னாக பதிவாகியுள்ளது.


சமீபத்திய ஆய்வின்படி, சர்வதேச சந்தையில் 1 கிலோ அளவுள்ள செம்மறி ஆடு இறைச்சியின் விலை ரூ.600 முதல் ரூ.700 வரை விற்கப்படுகிறது. தெலங்கானாவில் உள்ள சில்லறை சந்தைகளில் 1 கிலோ செம்மறி ஆட்டின் இறைச்சி 1,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.


மதுபானம் உட்கொள்ளுதல் தொடர்பான ஆய்வறிக்கை


மது அருந்துவதைப் பொறுத்தவரை, தெலங்கானா மாநிலத்தின் மக்கள் தொகையில் 19 சதவீதம் பேர் மது அருந்துவதாக சமீபத்திய கணக்கெடுப்பு கூறுகிறது. இது தேசிய சராசரியான 17.3 சதவீதத்தை விட அதிகம் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.


தேசிய சுகாதார ஆய்வின்படி, நாட்டில் மற்ற மாநிலங்களில் மதுபானம் அருந்துபவர்களை விட தெலங்கானாவாசிகள் அதிக மது அருந்துகின்றனர். மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரை, அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசம், மொத்த மக்கள் தொகையில் 17.3 சதவீதம் பேர், 65 லட்சத்துக்கும் அதிகமான ஆந்திரவாசிகள் மதுபானம் அருந்தும் மக்கள் தொகையாக உள்ளது.