திருப்பதியில் சிங்கத்துடன் செல்ஃபி எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


பொதுவாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஆங்காங்கே நிலவும் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப உயிரியல் பூங்காங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் வருகை தருவது வழக்கம். இத்தகைய பூங்காக்காளில் இருக்கும் உயிரினங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மக்கள் பார்வையிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் ஆர்வம்  மிகுதியில் இங்கு வருகை தரும் மக்கள் செய்யும் செயல்கள் அவர்களுக்கே ஆபத்தாக அமைகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் திருப்பதியில் நடைபெற்றுள்ளது. 


ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான்  கோயில் உலகளவில் புகழ்பெற்றது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதேபோல் இதே திருப்பதியில் ஸ்ரீவெங்கடேஸ்வரா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் ஏராளமான வனவிலங்குகள் மக்களின் பார்வைக்காக இடம் பெற்றுள்ளது. உள்ளூர் மக்களை விட வெளியூரில் இருந்து வருபவர்கள் உயிரியல் பூங்காவுக்குள் சென்று வனவிலங்குகளை நேரில் பார்த்து ரசிப்பது வழக்கம். 


இந்த பூங்காவில் ஒரு பெண் சிங்கம், 2 ஆண் சிங்கம் என மொத்தம் 3 சிங்கங்கள் உள்ளது. சிங்கம் இருக்கும் இடத்துக்கும், மக்கள் செல்லும் இடத்துக்கும் இடையே தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நேற்று சிங்கத்தை பார்வையிட வந்த நபர் ஒருவர் அங்கிருந்த தடுப்புகளை தாண்டி ஏறி குதித்து சிங்கம் இருக்கும் இடத்துக்கு சென்றார். இதனைப் பார்த்து அங்கிருந்த ஊழியர் அதிர்ச்சியடைந்து அந்த இளைஞரை திரும்ப  வருமாறு எச்சரித்தார். 


ஆனால் அந்த நபர் எதையும் கேட்காமல் சிங்கத்தோடு செல்ஃபி எடுக்க முயன்றார். தன்னுடைய இடத்தில் ஏற்பட்ட அசௌகரிய நிலைமையால் ஆக்ரோஷமான துங்காபூர் என்ற ஆண் சிங்கம் அந்த நபரின் கழுத்தை கடித்தது. இதனைப் பார்த்து பூங்காவில் இருந்த நபர் கத்தி கூச்சலிட்டனர். ஆனால் விடாமல் சிங்கம் அந்த நபரை பலமாக தாக்கியது. அவரோ தப்பித்து மரத்தில் ஏற முயன்றார். சிங்கம் விடாமல் தாக்கியதில் அந்த நபர் உயிரிழந்தார். 


இதனையடுத்து வனவிலங்கு ஊழியர்கள், பூங்கா ஊழியர்கள், போலீசார் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து சிங்கத்திடம் இருந்து அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து நடந்த விசாரணையில் இறந்த நபர், ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் பன்சூர் பகுதியை சேர்ந்த பிரகலாத் குஜ்ஜார் என்பது தெரியவந்தது. அவர் மதுபோதையில் இருந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் என்ன நிலவரம் என தெரியவரும். உயிரியல் பூங்காவில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.