இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியைக் கடந்துள்ளது. இதுவரை மொத்தம் 3,00,14,713 பேர்

  கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 39,649 பேர் குணமடைந்தனர். இதன்படி குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.22 சதவீதமாக அதிகரித்துள்ளது.


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,154 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தொடர்ந்து 15-வது நாளாக அன்றாட புதிய பாதிப்புகள் 50,000-க்கும் கீழ் பதிவாகியுள்ளன. நம் நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,50,899 ஆக சரிந்துள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் வெறும் 1.46 சதவீதமாகும். கடந்த 24 மணி நேரத்தில் 14,32,343 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 43,23,17,813 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.






வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 2.32 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.59 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 21 நாட்களாக இந்த எண்ணிக்கை 3 சதவீதத்திற்கு குறைவாகவும், 35 நாட்களாக 5 சதவீதத்திற்கு குறைவாகவும் உள்ளது.


நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு இதுவரை  38.86 கோடிக்கும் அதிகமான (38,86,09,790) கொரோனா தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கியுள்ளது. மேலும், 63,84,230 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன. இன்று காலை  8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 37,31,88,834 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 1.54 கோடி (1,54,20,956) கொரோனா தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன. 



தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது.


இந்நிலையில், தமிழ்நாட்டை பொருத்தவரை, கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் கொரோனாவால 2775 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது 47 பேர் மரணமடைந்துள்ளனர். இணைநோய்கள் இல்லாதவர்களில் 9 பேர் இறந்துள்ளனர். 50 வயதுக்கு உட்பட்டவர்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 51வது நாளாக ஒருநாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது






பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல்இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.