Upendra Dwivedi: இந்திய ராணுவத்தின் அடுத்த துணை தளபதியாக வரும் 15ம் தேதி, ஜெனரல் உபேந்திர திவேதி பொறுப்பேற்க உள்ளார்.


இந்திய ராணுவத்தின் துணை தளபதி நியமனம்:


வடக்கு கட்டளைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி பிப்ரவரி 15 ஆம் தேதி, இந்திய ராணுவத்தின் புதிய துணைத் தலைவராக பதவியேற்கிறார். உதம்பூர் பகுதியில் அவர் வகித்த வந்த பதவிக்கு லெப்டினன்ட் ஜெனரல் எம்வி சுசீந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார். வரும், மே 31-ம் தேதியுடன் தற்போதைய ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே ஓய்வு பெறுவதற்கு முன்னதாக இந்தப் புதிய நியமனங்கள் வந்துள்ளன.  டிசம்பர் 1984 இல் ஜம்மு காஷ்மீர் ரைபிள்ஸின் 18 வது பட்டாலியனில் நியமிக்கப்பட்ட, லெப்டினன்ட்-ஜெனரல் திவேதி, பிப்ரவரி 2022 இல் முக்கியமான வடக்குக் கட்டளை பிரிவின் தலைவராக பொறுப்பேற்றார். ஜூன் 1985 இல் 1 அசாம் படைப்பிரிவில் நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் குமார், மார்ச் 2023 இல் துணைத் தலைவராக ஆனார்.






அடுத்த ராணுவ தளபதி யார்?


ஜெனரல் மனோஜ் பாண்டே ஓய்வுபெறும் போது, ​​புதிய ராணுவத் தலைவர் பதவிக்கான பரிந்துரை பட்டியலில் திவேதியின் பெயர் முதலாவதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் சைனிக் பள்ளி, ரேவா, நேஷனல் டிஃபென்ஸ் அகாடமி மற்றும் இந்தியன் மிலிட்டரி அகாடமி ஆகியவற்றின் முன்னாள் மாணவர் ஆவார். ராணுவத் தலைமையகத்தில் துணைத் தலைவராகவும், யோல்-அடிப்படையிலான தலைமையகங்கள் 9 கார்ப்ஸின் பொது அதிகாரியாகவும், காலாட்படையின் இயக்குநர் ஜெனரலாகவும் பணியாற்றியுள்ளார். 






வடக்கு கமாண்டிங் பிரிவு:


வடக்கில் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் பொறுப்பை வடக்கு கட்டளை (Northern Command) தான் வகிக்கிறது. அதோடு,  ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் நரம்பு மையமாகவும் உள்ளது. மே 2020 முதல் கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) வழியாக,  இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே மோதல் போக்கானது தொடர்ந்து நீடிக்கும் நேரத்தில் குமார் வடக்குக் கட்டளையின் கமேண்டர் பொறுப்பை ஏற்கிறார்.  மேலும் எல்லை பிரச்னைக்கான நிரந்தர தீர்வுக்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. பேச்சுவார்த்தைகள் அவ்வப்போது நடைபெற்று வந்தாலும், இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை.


தொடரும் பதற்றம்:


கால்வான் பள்ளத்தாக்கு, பாங்கோங் த்ஸோ, கோக்ரா (பிபி-17 ஏ) மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் (பிபி-15) ஆகிய இடங்களில் இருந்து நான்கு சுற்றுகளாக படைகள் திரும்பப் பெறப்பட்ட போதிலும், இந்திய மற்றும் சீனப் படைகள் தலா பல்லாயிரக்கணக்கான துருப்புக்களையும், மேம்பட்ட ஆயுதங்களையும் லடாக் எல்லையில் நிலைநிறுத்தியுள்ளன. இந்திய மற்றும் சீனப் படைகள் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தின, ஆனால் டெப்சாங் மற்றும் டெம்சோக்கில் உள்ள பிரச்சனைகளுக்கு இன்னும் முடிவு எட்டப்படவில்லை.