Manipur Violence : லிபியா, சிரியா நாடுகளை போன்று மணிப்பூர் மாறி வருவதாக அம்மாநிலத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் மாநிலத்தின் பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தினரை சேர்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு முதல், மெய்டீஸ் சமூகத்தினர், இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மெய்டீஸ் சமூகத்தினருக்கு எஸ்டி அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலத்தின் பழங்குடியினர் நீண்ட காலமாக எதிர்க்கின்றனர்.
எஸ்டி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற மெய்டீஸ் சமூகத்தினரின் நீண்ட நாள் கோரிக்கைக்கு எதிராக பழங்குடியினர் ஒற்றுமை பேரணி மே 3ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் வன்முறை வெடித்தது. கலவரம் வெடித்ததில் இருந்து இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 35 ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்டோர் தங்களின் ஊர்களில் இருந்து வெளியேறி ராணுவ முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
அமைச்சர் வீட்டிற்கு தீ வைப்பு
மணிப்பூர் கலவரம் ஒரு மாதங்களுக்கு மேலாக நீடித்து வருவதால் 11 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளன. வன்முறையைத் தூண்டும் வதந்திகளைத் தடுக்க மாநிலம் முழுவதும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போதும் கூட இம்பாலில் உள்ள மத்திய அமைச்சரின் வீடு நேற்று முன்தினம் தீ வைத்து எரிக்கப்பட்டது. 1,000 க்கும் மேற்பட்ட கும்பலால் மத்திய அமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது. சம்பவம் நடந்த போது மத்திய அமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங் வீட்டில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவத்தின் போது அமைச்சரின் வீட்டில் ஒன்பது பாதுகாப்புப் படையினர், ஐந்து பாதுகாவலர்கள் மற்றும் எட்டு கூடுதல் காவலர்கள் பணியில் இருந்தனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி வேதனை
இந்நிலையில், மணிப்பூரில் நடந்துவரும் வன்முறை தொடர்பாக அம்மாநிலத்தில் வசித்து வரும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் எல் நிஷிகாந்தா சிங் தனது ட்விட்டரில் கருத்தை பதிவிட்டுள்ளார். அதன்படி, ”நான் மணிப்பூரைச் சேர்ந்த ஒரு சாதாரண இந்தியன். ஓய்வு பெற்ற வாழ்க்கை வாழ்கிறேன். மாநிலம் தற்போது மாநிலமாக இல்லை.
லிபியா, லெபனான், நைஜீரியா, சிரியா போன்ற நாடுகளைப் போலவே உயிரும் உடைமைகள் எப்போது வேண்டுமானாலும் அழிக்கப்படலாம் என்ற நிலையில் தான் மணிப்பூர் இருக்கிறது. இதனை யாராவது கேட்கிறீர்களா?” என்று ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி பதிவிட்டுள்ளார். இந்த ட்விட்டானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.