பெண்களின் முன்னேற்றம்தான் ஒரு நாட்டின் முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும் என்று பல அறிஞர்கள் தொடர்ந்து சொல்கின்றனர். ஐ.நா அமைப்பு கூட பெண்கள் முன்னேற்றத்தை இலக்காக வைத்து அதை நோக்கிப் பயணிக்கத் தனது நெடுநாள் வளர்ச்சித் திட்டத்தில் இதைச் சேர்த்துள்ளது. பெண்கள் பல துறைகளில் இன்று சிறந்து விளங்கத் தொடங்கிவிட்டாலும் அவர்களுக்கான சவால்கள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. அதனை எப்படிப் பெண்கள் வெற்றிகரமாக எதிர் கொள்கிறார்கள் என்பதே பெண்களின் முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும். இந்தக் கருத்துகள் வருவதற்கு முன்னரே சாதாரணமாக இந்தத் தடைகளை உடைத்திருக்கிறார் இன்ஃபோசிஸ் சுதா மூர்த்தி. பொறியாளர், எழுத்தாளர், பேராசிரியர், சமூகத் தொண்டாற்றுபவர் என்று பல முகங்களை உடையவர் சுதா. இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான டெல்கோ நிறுவனத்தில் பணியாற்றிய முதல் பெண் பொறியாளரும் சுதாதான்.
அவர் ஒரு காண்ஃபரன்ஸில் கலந்துகொள்ளும்போது அவரிடம் ஒரு வேடிக்கையான கேள்வி கேட்கப்பட்டது. அது, "உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் சண்டை வருமா?" என்று. அப்போது அதற்கு பதிலளித்த சுதா மூர்த்தி, "நானும் என் கணவரும் சண்டை இடுவதே இல்லை… ஏனெனில் நாங்கள் இருவரும் சந்தித்துக் கொள்வதே இல்லை" என்று கூறி அரங்கத்தை சிரிப்பலையில் அதிர வைத்தார். "என் கணவர் 20 நாள் சுற்றுப்பயணம் சென்றுவிடுவார், நான் 22 நாட்கள் சென்றுவிடுவேன், ஒரே நேரத்தில் வீட்டில் இருப்பது ஐந்தாறு நாட்கள் தான், அதிலெப்படி சண்டை போடுவது?" என்று கேட்டார்.
சுதா ராமன் பல கதைகளை எழுதியுள்ள பிரபல எழுத்தாளரும் ஆவார். அவர் ஐம்பது வயதுக்கு மேல் தான் எழுத தொடங்கியதாகவும், அதுவும் வெளியீட்டாளர்களின் விருப்பத்திற்கு இணங்க எழுதியதாகவும் கூறுவார். அவர் ஆங்கில நாளிதழ் படித்துதான் ஆங்கிலம் கற்றுக்கொண்டார் என்றும் கூறுவார். அவர் நாராயண மூர்த்தியுடன் புத்தகங்கள் மூலம் பழக ஆரம்பித்து காதலாக மாறி திருமணம் செய்துகொண்டவர். திருமணத்திற்கு பிறகு மும்பை சென்ற இன்போசிஸ் நிறுவனம் துவங்கி இன்றுவரை அசைக்க முடியாத நிறுவனமாக உயர்ந்து நிற்கிறது. அவர் அந்த கான்ஃபரன்ஸில் மேலும் தனது கணவர் குறித்து பேசுகையில், "நாராயண மூர்த்தி மிகவும் ஆழமாக இன்போசிஸ் நிறுவனத்திற்காக தன் வாழ்வை அற்பணித்தவர். அந்த காலத்தில் காடுகளுக்கு, வனவாசம் செய்து தியான நிலையில் இருப்பார்கள், இவர் ஐடி கம்பெனிக்கு சென்று தியானம் இருக்கிறார். அவ்வளவு ஈடுபாடுதான் இவ்வளவு பெரிய நிறுவனத்தை உருவாக்க வித்திட்டுள்ளது. அவரது நினைவுகள் முழுக்க வேலை தான் இருக்கும்.
30 வருடத்தில் ஒரே ஒரு ஆசிரியரின் மகன்தான் இவ்வளவு பெரிய நிறுவனத்தை உருவாக்கி உள்ளார், இது சாதாரண விஷயம் இல்லை. அப்படி வேலை செய்யும் கணவர் இருக்கும்போது மனைவிக்கு என்ன வேலை. என்னை சினிமாவுக்கு அழைத்துச்செல், பிறந்தநாளுக்கு புடவை வாங்கிக்கொடு, என்றெல்லாம் கேட்க முடியாது. அதெல்லாம் அவரால் செய்யவே முடியாது. அவரை அவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே ஏற்றுக்கொள்வேன்." என்று பேசினார்.
"பெண்களுக்கு சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான், 'கணவர் எப்படி இருக்கிறாரோ, அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்', அவரிடம் இல்லாததை எதிர்பார்க்காதீர்கள், ஷாருக்கானையோ, யாரையோ அவருக்குள் எதிர்பார்க்காதீர்கள். அவரை சுதந்திரமாக இருக்க விடுங்கள், அவரை கட்டி வைக்காதீர்கள், கேள்வி கேட்காதீர்கள். குடும்பத்தை பாதிக்காத வரை எதற்கு செலவு செய்தாய், என்ன செலவு செய்தாய் என்றல்லாம் கேட்க வேண்டாம், அதிகமாக என்ன செய்துவிடப்போகிறார், அவர்கள் அம்மாவுக்கு செலவு செய்துவிட போகிறார், அல்லது அவரது சகோதரிக்கு… செய்யட்டுமே, நான் என் கணவரை 26 வயதில் திருமணம் செய்தேன், அப்போதுதான் அவர் எனக்கு கணவர். அதற்கு முன்னரே அவர் ஒருவருக்கு மகன்" என்று பெண்களுக்கு அறிவுரை வழங்கினார்.