ஆண்களுக்கான பாடி ஸ்ப்ரே விளம்பரங்களின் கன்டென்ட்கள் தொடர்பாக சமூக ஊடகங்களில் சலசலப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, இரண்டு புதிய லேயர் ஷாட் விளம்பரங்களை ஒளிபரப்ப விளம்பரத் தரக் கவுன்சில் ஆஃப் இந்தியா தடை விதித்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் போட்டியின் போது சோனி லிவில் இந்த விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டன.
பெண்களை இழிவு செய்யும் விளம்பரங்கள்
இந்த விளம்பரங்கள் பெண்களுக்கு அவமரியாதை விளைவிக்கும் வகையில் இருப்பதாகவும், கற்பழிப்பு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதாகவும் இருப்பதாக சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்த நிலையில், டெல்லி மகளிர் ஆணையத்தின் (டிசிடபிள்யூ) தலைவர் ஸ்வாதி மாலிவால் சனிக்கிழமை ஒரு ட்வீட் செய்துள்ளார், இந்த விளம்பரங்கள் ஆண்மைத்தனத்தின் விஷத்தன்மையை மோசமாக வெளிப்படுத்துகின்றன என்று அவர் அதை எடுத்துக் காட்டினார். அதனைத் தொடர்ந்து டெல்லி காவல்துறை, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திடம் இந்த விவகாரம் சென்றது.
ASCI ட்விட்டரில் கருத்து
சில பயனர்கள் இந்திய விளம்பர தரநிலை கவுன்சில் (ASCI) ஐ இந்த பதிவில் டேக் செய்தனர். அதனை தொடர்ந்து இது "ASCI விதிமுறைகளை தீவிரமாக மீறுகிறது" என்று ASCI கருத்து தெரிவித்தது. "எங்களை டேக் செய்ததற்கு நன்றி. இந்த விளம்பரம் ASCI வரையறைகளை தீவிரமாக மீறுகிறது மற்றும் பொது நலனுக்கு எதிரானது. நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளோம், விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், விளம்பரத்தை ஒளிபரப்ப தற்காலிக தடை விதிக்கப்பட்டு, விளம்பரதாரருக்கு அனுப்பப்பட்டுள்ளது" என்று விளம்பர ஒழுங்குமுறை அமைப்பு ட்விட்டரில் எழுதி இருந்தது.
விளம்பரத்தில் உள்ள சர்ச்சை
ஒரு அறையில் ஒரு இளம் ஜோடி பாலுறவுக்கு தயாராகிறார்கள். அந்த அறையை தட்டாமல், கொள்ளாமல் உள்ளே நுழைகிறார்கள் அந்த ஆணின் நண்பர்கள். அதில் ஒருவர் கேட்கிறார், "ஷாட் எடுத்துக்கலாமா" என்று. இரட்டை அர்த்தத்தில் கேட்கப்பட்ட அந்த கேள்விக்கு இளம் ஜோடி திரு திருவென முழிக்கிறார்கள். பின்னர் மேசையின் மீது இருக்கும் லேயர் ஷாட் ஸ்ப்ரேயை எடுத்து உடலில் அடித்துக்கொண்டு "இந்த ஷாட்டை சொன்னேன்" என்கிறார். வரையறை இன்றி பெண்களை இழிவுபடுத்தும் இந்த விளம்பரத்தை பார்த்தவர்கள் விமர்சித்து வருகின்றார்கள்.
இன்னொரு சர்ச்சைக்குரிய விளம்பரம்
ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நான்கு ஆண்கள் நிற்கின்றனர். அங்கு ஒரு பெண் வந்து நின்று குனிந்து நின்று பொருட்களை எடுக்கிறார். அந்த ஆண்களில் ஒருவர் சொல்கிறார், "நாம நாலு பேர் இருக்கோம்", என்று. இன்னொருவர், "ஆனா இங்க ஒண்ணுதான் இருக்கு", என்கிறார். இன்னொருவர், "அப்போ ஷாட் எடுத்துக்கலாமா" என்கிறார். அதிர்ந்து போய் அந்த பெண் திரும்பி பார்க்கிறார். அந்த நால்வரும், அங்கு இருக்கும் அந்த லேயர் ஷாட் ஸ்ப்ரேயை எடுத்து அடித்துக்கொள்கின்றனர். இந்த விளம்பரமும் கூட்டு பாலியல் வன்கொடுமையை ஊக்குவிப்பதாகவும், பெண்களை இழிவாக பேசுவதாகவும் விமர்சிக்கப் படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்