17 பீரங்கி குண்டுகள் முழங்க ஒரே தகன மேடையில் வைக்கப்பட்டிருந்த பிபின் ராவத், மதுலிகா ராவத் உடல்களுக்கு அவர்களின் மகள்கள் க்ரித்திகா, தாரிணி இருவரும் இறுதிச் சடங்குகள் செய்து உடல்களுக்கு தீமூட்டி இருக்கின்றனர். நாடு தலைமை தளபதிக்கு பிரியாவிடை கொடுத்திருக்கிறது.


ஒரு பெண், தன் தந்தைக்கோ, தாய்க்கோ இறுதிச்சடங்கைச் செய்தது இதுதான் முதல்முறை என்று சொல்ல முடியாது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தாலும் இன்றும் அது பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இறுதிச் சடங்கில் பெண்கள் கலந்துகொள்ளக் கூடாது, மயானம் வரை வரக்கூடாது போன்ற சம்பிரதாயங்கள் இப்போதும் பெரும்பான்மையாக கடைபிடிக்கப்பட்டுத்தான் வருகின்றன. இதே ஆண்டு, தமிழ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது நடிகர் விவேக்கின் மரணம். மறைந்த நடிகர் விவேக் அவர்களின் இறுதிச்சடங்கை அவரது மகளே நிறைவேற்றினார். பிரபலங்களின் வீட்டில் இத்தகைய சமமான நிகழ்வுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், பொது சமூகத்தில் இது ஒரு பெருங்குற்றமாகவே இன்னும் பார்க்கப்படுகிறது


பெண்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்காமல் தடுக்கப்படுவதற்கு சடங்கு, சம்பிரதாயம் எனப் பல காரணங்கள் அடுக்கப்பட்டாலும், அதற்குப் பின்னால் இருப்பது ஆண்மையவாதம் என்னும் வாதம் அன்றி வேறொன்றுமில்லை. குடும்பங்களை தோளில் தூக்கிச்சுமக்க ஆரம்பித்துவிட்டனர் பெண்கள். சமூகப் பொறுப்புகள், குடும்பப் பொறுப்புகள், இரண்டையும் அங்கீகரிக்காத பொது சமூகத்தின் ஏச்சு பேச்சுகள் என எல்லாவற்றையும் தூக்கிச் சுமக்கும் பலம் வாய்ந்த பெண்களின் தோள்கள், தாய், தந்தையின் உடல்களைச் சுமப்பதற்கும், எரியூட்டுவதற்கும் திறன் பெற்றவையே.


குடும்பத்தில் ஒரே மகளாகப் பிறந்து தன் பெற்றோரைக் காப்பாற்றுகிறார்கள் பெண்கள். திருமணம் முடிந்திருந்தால், தன் பிறந்த வீட்டில் நடக்கும் இறுதிச் சடங்கில் பங்கேற்கக்கூடாதா? வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்புள்ள ஒரு பெண், தன் பெற்றோரின் இறுதிச் சடங்குகளை உறவுக்கார ஆண் ஒருவர் செய்வதை எப்படி ஏற்றுக்கொள்வாள்? என்னுடைய அப்பா இறந்தபோது, எனக்கு வயது 15. நண்பர்கள், உறவினர்கள் என அதிகம் உறவுப் பாராட்டாத என் அப்பாவின் இறுதிச்சடங்கை உறவுக்கார ஆண் ஒருவர் செய்ய வேண்டுமென்றபோது நானும், அம்மாவும் ஏற்றுக்கொள்ளவில்லை. “நீ எனக்கு பையனுக்கு பையன், புள்ளைக்கு புள்ள மாதிரி” இப்படி அதிகமுறை என்னைப் பார்த்துச்சொன்ன அப்பாவின் இறுதிச்சடங்கை நானே செய்ததுதான் அப்பாவிற்கு நான் செலுத்தும் உண்மையான மரியாதை என நினைத்தேன். செய்தேன். எனக்கும் அதுதான் மன திருப்தி. 


இன்று, விவேக், பிபின் ராவத் போன்ற பிரபலங்களின் மகள்கள் அவர்களது பெற்றோர்களின் இறுதிச்சடங்கை செய்வது பேசுப்பொருளாகிறது. இது பிரபலங்களின் முற்போக்கு எனக் கருதாமல், பொதுச் சமூகமும் இதை சாதாரண நிகழ்வாக அங்கீகரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. தடைகளை உடைப்போம்.


பேசுவோம், மனம் களைவோம். மாறுவோம்.


பேசுவதற்கும், கேட்பதற்கும், செய்வதற்கும் தயாராக இருக்கின்றனர் மகள்கள்! இன்று பிபின் ராவத், மதுலிகா ராவத் அவர்களின் இறுதிச்சடங்கை  நிறைவேற்றிய அவரது மகள்களுக்கு அன்பும், அணைப்பும், நன்றியும்! காலம் உங்களுக்கு ஆறுதல் தரட்டும்.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண