உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற வன்முறையில்  உயிரிழந்த குடும்பத்தினரை சந்திக்க சென்றபோது, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள அறையை, பிரியங்கா காந்தி துடைப்பத்தால் பெருக்கும் காட்சி வெளியாகி இருக்கிறது. இது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதை தடுத்த காவல் துறையினரை கண்டித்து பிரியங்கா காந்தி உண்ணாவிரதம் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


 






முன்னதாக, உத்தரப்பிரதேசத்தில் லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்கசென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். பிரியங்கா காந்தி இன்று அதிகாலை பன்வீர்பூர் கிராமத்திற்கு காரில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, அவரை கிராமத்திற்குள் நுழைய அனுமதிக்காமல், கிராம எல்லையிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். பிரியங்கா கைது செய்யப்பட்டதாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.


 






உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்த பத்திரிகையாளர் ராமன் காய்சிப் என்பவர் உயிரிழந்தார். இதன்மூலம், இந்த வன்முறையில் பலியானோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த வன்முறை தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. அதில், மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, மகன் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.