கடந்த 2021ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் மீது மத்திய  இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா காரை ஏற்றியதாக குற்றம்சாட்டுப்பட்டது. 


லக்கிம்பூர் கேரி வழியாக காரில் சென்ற ஆஷிஷ் மிஸ்ரா, தனது ஓட்டுநரிடம், அங்கிருந்த விவசாயிகள் மீது காரை ஏற்றும்படி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. காரை ஏற்றியதில் நான்கு விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.


இந்த வன்முறை தொடர்பான வழக்கில் ஆஷிஷ் மிஸ்ரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.


விசாரணை காலம் முழுவதும் காவலில் வைக்க கூடாது என கோரி பிணை தாக்கல் செய்துள்ளார் ஆஷிஷ் மிஸ்ரா. முதலில், அவரின் பிணை மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதை தொடர்ந்து, அவர் உச்ச நீதிமன்றத்தில் பிணை தாக்கல் செய்தார்.


இந்நிலையில், லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கின் விசாரணை நிறைவடைய 5 ஆண்டுகளாகும் என உச்ச நீதிமன்றத்தில் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி தகவல் தெரிவித்துள்ளார். 


பிணை கேட்டு மிஸ்ரா தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, செஷன்ஸ் நீதிபதி தெரிவித்த தகவலை ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த நீதிபதி முகுல் ரோஹத்கியிடமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆஜரான நீதிபதி பிரசாந்த் பூஷணிடமும் பகிர்ந்து கொண்டது.


கடந்தாண்டு டிசம்பர் 12ஆம் தேதி, விசாரணை முடிவடைவதற்கான கால நேரத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய செஷன்ஸ் நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


 






இந்த சம்பவத்துக்குக் காரணமான மத்திய இணையமைச்சர் அஜய் மிஷ்ராவைப் பதவிநீக்கம் செய்து, சட்டநடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டுமெனவும், ஆஷிஷ் மிஸ்ராவை கொலைவழக்கின் கீழ் கைதுசெய்ய வேண்டும் என்றும் விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


வேளாண் சட்டங்களுக்கு எதிராக போடியாக விவசாயிகள் மீது மத்திய இணை அமைச்சரின் மகனே காரே ஏற்றி கொலை செய்ததாக வெளியான தகவல் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக, இந்த விவகாரம் உத்தர பிரதேச தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 


ஆனால், அந்த விவகாரம் தேர்திலில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும். கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வென்றது குறிப்பிடத்தக்கது.