கடந்த 2021ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் மீது மத்திய  இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா காரை ஏற்றியதாக குற்றம்சாட்டப்பட்டது. 


லக்கிம்பூர் கேரி வழியாக காரில் சென்ற ஆஷிஷ் மிஸ்ரா, தனது ஓட்டுநரிடம், அங்கிருந்த விவசாயிகள் மீது காரை ஏற்றும்படி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. காரை ஏற்றியதில் நான்கு விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.


இந்த வன்முறை தொடர்பான வழக்கில் ஆஷிஷ் மிஸ்ரா சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்டவரான மத்திய  இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு எட்டு வார காலம் பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.


பிணை காலத்தில் ஆஷிஷ் மிஸ்ரா வெளியில் இருக்கும் போது உத்தர பிரதேசம் அல்லது டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் வசிக்க கூடாது. உத்தர பிரதேசத்தில் இருந்து ஒரு வாரத்திற்குள் வெளியேறுமாறுவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


"ஆஷிஷ் மிஸ்ராவோ அல்லது அவரது குடும்பத்தினரோ சாட்சியங்களை தன் பக்கம் இழுக்க முயற்சி செய்தால் அவரின் பிணை ரத்து செய்யப்படும்" என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


சம்பவம் நடந்த ஒரு சில நாள்களிலேயே ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, பிணை வழங்கக் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். விசாரணை காலம் முழுவதும் காவலில் வைக்க கூடாது என கோரி பிணை தாக்கல் செய்தார் ஆஷிஷ் மிஸ்ரா. ஆனால், பிணை மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. 


இதை தொடர்ந்து, அவர் உச்ச நீதிமன்றத்தில் பிணை தாக்கல் செய்தார். கடந்தாண்டு டிசம்பர் 12ஆம் தேதி, விசாரணை முடிவடைவதற்கான கால நேரத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய செஷன்ஸ் நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கின் விசாரணை நிறைவடைய 5 ஆண்டுகளாகும் என உச்ச நீதிமன்றத்தில் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி தகவல் தெரிவித்தார்.


இதற்கு மத்தியில், ஆஷிஷ் மிஸ்ரா தந்தை அஜய் மிஸ்ரா, சாட்சியங்களுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் மிரட்டியதாகவும் விவசாயிகளின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.  


இந்த சம்பவத்துக்குக் காரணமான மத்திய இணையமைச்சர் அஜய் மிஷ்ராவைப் பதவிநீக்கம் செய்து, சட்டநடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டுமெனவும், ஆஷிஷ் மிஸ்ராவை கொலைவழக்கின் கீழ் கைதுசெய்ய வேண்டும் என்றும் விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது மத்திய இணை அமைச்சரின் மகனே காரே ஏற்றி கொலை செய்ததாக வெளியான தகவல் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக, இந்த விவகாரம் உத்தர பிரதேச தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 


ஆனால், அந்த விவகாரம் தேர்திலில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும். கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வென்றது குறிப்பிடத்தக்கது.