இனி மாதத்தில் ஒரு நாள் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கப்படும் என L&T நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் பெண் ஊழியர்கள் செம குஷியில் உள்ளனர்.


மார்ச் 8ஆம் தேதியான நாளைய தினம் உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பள்ளிகள், கல்லூரிகள், வேலை செய்யும் நிறுவனங்கள் என பல்வேறு இடங்களிலும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.


அந்த வகையில் L&T நிறுவனத்தில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட L&T நிறுவன தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியன் ”நம் நிறுவன பெண் ஊழியர்களுக்கு இனி மாதத்தில் ஒருநாள் ஊதியத்துடன் விடுப்பு வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.


பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானப் பிரிவின் சுமார் 5,000 பெண் ஊழியர்கள் இந்த நடவடிக்கையால் பயனடைவார்கள். இந்த அறிவிப்பு தாய் நிறுவனமான எல் அண்ட் டி நிறுவனத்தின் ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும், நிதி சேவைகள் அல்லது தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுள்ள அதன் துணை நிறுவனங்களுக்கு அல்ல என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


எல் அண்ட் டி நிறுவனத்தில் 60,000 ஊழியர்கள் உள்ளனர், அவர்களில் 9 சதவீதம் பேர் அதாவது சுமார் 5,000 பேர் பெண்கள், இந்த நடவடிக்கையால் அவர்கள் பயனடைவார்கள், இது உடனடியாக செயல்படுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஊழியர்கள் வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்றும், தங்கள் மனைவிகளைப் பார்த்துக் கொண்டே இருக்கக்கூடாது என்றும் கூறிய கருத்துக்களுக்காக நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான எஸ்.என். சுப்பிரமணியன் விமர்சனங்களை எதிர்கொண்ட சில வாரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.


ஸ்விக்கி மற்றும் ஜொமாடோ போன்ற நிறுவனங்கள் கடந்த காலங்களில் மாதவிடாய் விடுமுறையை அறிவித்துள்ளன, ஆனால் முக்கிய வணிக நிறுவனங்கள் இதுபோன்ற முயற்சிகளை தற்போது அறிவித்து வருகின்றன.


பீகார், ஒடிசா, சிக்கிம் மற்றும் கேரளா ஆகிய நான்கு மாநிலங்கள் தங்கள் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்க ஏற்பாடு செய்துள்ளன. இந்த விவகாரத்தில் அரசாங்கம் ஒரு கொள்கையை வகுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.