Kumbh Mela 2025 Facts: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, மகா கும்பமேளா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


மகாகும்ப மேளா 2025:


உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை , மகா கும்பமேளா பிரமாண்டமாக நடைபெறும். இந்த ஆன்மீக கொண்டாட்ட நிகழ்வில் துறவிகள், ஆண்கள் , பெண்கள், குழந்தைகள், பண்டிதர்கள் மற்றும் பலர் குவிகின்றனர். அந்த வகையில் பிரயாக்ராஜில் இன்று தொடங்கும் மகா கும்பமேளா, பிப்ரவரி 26 புதன்கிழமை வரை தொடரும். வரலாற்று ரீதியாக, கும்பமேளா புனித நீரில் நீராடுவதுடன், பாவங்களைப் போக்குவதற்கும், மோட்சத்திற்கான (விடுதலை) பாதையில் இறங்குவதற்கும் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.



மகா கும்பமேளா முக்கியத்துவம்:


பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் கொண்டாடப்படும்  கும்பமேளாவானது, மூன்று புனித நதிகளான கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதியின் சந்திப்பை நினைவுபடுத்துகிறது. மகா கும்பத்தில் ஆறு புனித நீராடல்கள் உள்ளன. அதில் மூன்று அரச நீராடல் (ஷாஹி ஸ்னான்) மற்றும் மூன்று மற்ற குளியல்கள் உள்ளன. அதன்படி, ஜனவரி 13 அன்று பௌஷ் பூர்ணிமா, ஜனவரி 14 அன்று மகர சங்கராந்தி (முதல் ஷாஹி ஸ்னான்), ஜனவரி 29 அன்று மௌனி அமாவாசை (இரண்டாவது ஷாஹி ஸ்னான்), பிப்ரவரி 3 அன்று பசந்த பஞ்சமி (மூன்றாவது ஷாஹி ஸ்னான்), பிப்ரவரி 12 அன்று மாகி பூர்ணிமா மற்றும் பிப்ரவரி 26 அன்று மஹா சிவராத்திரி (இறுதி ஸ்னான்) நீராடல்கள் கடைபிடிக்கப்படுகிறது.






உலகின் மிகப்பெரிய நிகழ்வு


மஹா கும்பமேளாவிற்கும் கும்பமேளாவிற்கும் உள்ள முதன்மையான வேறுபாடு இடம். கும்பமேளா நான்கு நகரங்களில் நடைபெறுகிறது, ஆனால் மகா கும்பமேளா பிரயாக்ராஜில் மட்டுமே நிரந்தரமாக நடைபெறுகிறது. அதோடு, கும்பமேளா மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது, ஆனால் மகா கும்பமேளா பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும்.  கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற மகா கும்பமேளாவில் 10 கோடி பேர் கலந்து கொண்டு சாதனை படைத்தனர். இந்த ஆண்டு, ரூ.6,382 கோடி ரூபாய் செலவில் 40 கோடி பக்தர்கள் புனித நீராடுவதில் பங்கேற்பார்கள் என்று மாநில அரசு எதிர்பார்க்கிறது, இது மகாகும்பத்தை உலகின் மிகப்பெரிய மத நிகழ்வாக மாற்றுகிறது. மகா கும்பமேளாவால் ரூ.2 லட்சம் கோடி அளவிற்கு மாநிலத்தில் வர்த்தகம் நடைபெறும் என உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.






முன்னேற்பாடுகள் தீவிரம்:


4,000 ஹெக்டேர் பரப்பளவில் கும்பமேளா மைதானம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள்  வருகையைக் கையாள ஆற்றின் இரு கரைகளிலும் 25 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச காவல்துறை 2,700 AI-செயல்படுத்தப்பட்ட கேமராக்களை நிறுவியுள்ளது. பாதுகாப்பை மேம்படுத்த நீருக்கடியில் ட்ரோன்களைப் பயன்படுத்துகிறது.
மேலும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஏழு அடுக்கு பாதுகாப்பு வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய ஆயுதப் போலீஸ் படைகள், BDD, AS சோதனைக் குழுக்கள், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாகாண ஆயுதக் காவலர்களின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும். பிரயாக்ராஜின் ஊரக மற்றும் நகர்ப்புற மாவட்டங்கள் முழுவதும் சுமார் 10,000 போலீசார் குவிக்கப்படுகின்றனர். 1,850 ஹெக்டேர் பரப்பளவில் 1.45 லட்சம் கழிவறைகள் மற்றும் 99 தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.