கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 20-ஆம் தேதி துபாயில் இருந்து வந்த விமானம் விபத்துக்குள்ளானதால் விமானிகள் உள்பட 21 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் அப்போது நாடு முழுவதும் கடும் வேதனையை ஏற்படுத்தியது. டேபிள் டாப் ரன்வேயைக் கொண்ட கோழிக்கோடு விமான நிலையத்தின் ஓடுதளம் மிகவும் குறுகலானது என்பதாலும், விமானத்தை தரையிறக்குவதற்கு முன்பு கோழிக்கோடு பகுதியில் பெய்த கனமழையால் ஓடுதளமும் மிகவும் ஈரமாக இருந்த காரணத்தாலும் இந்த விபத்து நடைபெற்றதாக அப்போது தகவல்கள் வெளியானது.


இந்த விமான விபத்து குறித்து விமான விபத்துக்கான புலனாய்வு அமைப்பு விசாரித்து வந்தது. கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்த விசாரணையின் அறிக்கையை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. 257 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.




அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, “விமானி விமானத்தை தரையிறக்கும்போது நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாததே இந்த விபத்திற்கு காரணம் ஆகும். விமானி விமானத்தை தரையிறக்கும்போது நிலைத்தன்மையற்ற அணுகுமுறைகளை தொடர்ந்து பின்பற்றியுள்ளார். விமானி  தரையிறக்க ஒதுக்கப்பட்ட பகுதியை தாண்டி ஓடுதளத்தின் பாதி தூரத்தில் தரையிறக்கியுள்ளார். விமானி தரையிறங்கும்போது விமானம் தரையிறங்கும் தூரம் எவ்வளவு தூரம் உள்ளது என்பது குறித்து விமானி யாருடனும் ஆலோசிக்கவில்லை. வழிகாட்டும் நெறிமுறைகளை மீறிய போதிலும் ஆட்டோபிரேக் செலக்‌ஷனை அவர் பயன்படுத்தவில்லை.




விமானத்தை தரையிறக்கும்போது மழை பெய்ததால் அங்கு தரையிறக்க போதுமான தூரம் உள்ளதா, எதிரே உள்ளவை நன்கு தெரிகிறதா என்பதையெல்லாம் விமானி யோசிக்கவில்லை. தரையிறங்கும் தூரத்தை கணிப்பதையே அவர் தவிர்த்துவிட்டார். விண்ட் ஷீல்டு வைபரும் சரியாக இயங்கவில்லை. மழை நன்றாக பெய்து கொண்டிருக்கும்போதே இடி, மின்னலுடன் கூடிய காற்று வீசியபோது விமானத்தை தரையிறக்குவது மிகவும் தவறு. டேபிள் டாப் ரன்வேயில் இதுபோன்ற ரிஸ்கை எடுக்கவே கூடாது.


கோழிக்கோட்டில் விமானம் தரையிறங்க தொடங்கியபோது வெறும் 27 விநாடிகள் மட்டுமே விண்ட் ஷீல்ட் வைப்பர் வேலை செய்தது. அதன் பின்னர் நின்றுவிட்டது. இந்த வைப்பரை சர்வீசுக்கு கொடுக்காததும், மோசமான வானிலை நிலவியதும் விபத்திற்கு ஒரு காரணம் ஆகும்.


விமானத்தில் உள்ள அனைத்து அமைப்புகளும் இயல்பாக செயல்பட்டது. இருப்பினும் விமான கண்காணிப்பு தொழில்நுட்பமானது விமானத்தை தரையிறக்குவதற்கு மேலும் ஒரு முயற்சி எடுக்க வேண்டும். இந்த விபத்து தொழில்நுட்ப கோளாறாலும் ஏற்பட்டிருக்கலாம் என்ற காரணத்தையும் புறக்கணித்து விட முடியாது.




விபத்துக்குள்ளான அந்த விமானத்தை அனுபவம் வாய்ந்த கேப்டன் தீபக் சாதே இயக்கினார். விமானப்படையில் பணியாற்றிய அவருக்கு விமானியாக 36 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. மேலும், அந்த விபத்தில் தீபக் சாத்தேவுடன் இணைந்து விமானத்தை இயக்கிய இணை விமானி அகிலேஷ் குமாரும் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


விபத்து நடைபெற்ற ஓராண்டுக்கு பிறகு, விமான விபத்திற்கு விமானியின் கவனக்குறைவே காரணம் என்று அறிக்கை வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோடில் உள்ள டேபிள்டாப் ரன்வே ஆபத்தானது என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.