கேரளாவில் குப்பை தொட்டியில் வீசப்பட்ட லாட்டரி சீட்டுக்கு ரூ.1 கோடி பரிசு விழுந்த சம்பவம் பேசு பொருளாக மாறியுள்ளது. 


லாட்டரி சீட்டு விற்பனை:


கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை என்பது அரசின் அனுமதியோடு நடைபெற்று வருகிறது. இதனால் திரும்பும் திசையெங்கும் லாட்டரி சீட்டுகள் கடைகளை காணலாம். நொடிப்பொழுதில் குடிசையில் இருந்தவர்களை கூட கோபுர உச்சிக்கு கொண்டு செல்லும் என்ற வாக்கியத்துக்கு ஏற்ப லாட்டரி சீட்டு பரிசால் லாபம் அடைந்தவர்கள் ஏராளம். அப்படியான ஒரு சம்பவம் மீண்டும் கேரளாவில் நடந்து மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.


அங்குள்ள கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மூலவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுனில் குமார். 53 வயதான இவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். மேலும் மனைவி பிந்து, மகள் சினேகா மற்றும் தாயார் சரசம்மா ஆகியோருடன் வசித்து வந்த சுனில் குமார் எப்போதும் லாட்டரி சீட்டு வாங்குவது வழக்கம். அந்த வகையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநில அரசின் 50-50 என்ற லாட்டரி குலுக்கல் பரிசு திட்டத்தில் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். இந்த லாட்டரி சீட்டின் பரிசுத்தொகை ரூ.1 கோடி என்பதால் பலரும் இதனை ஆர்வமுடன் வாங்கினர். 


1 கோடி பரிசு:


இதனிடையே கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி லாட்டரி சீட்டு குலுக்கல் நடைபெற்றது. மறுநாள் (அக்டோபர் 19) பரிசு பெற்றவர்கள் விவரங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியானது. இந்த இடைப்பட்ட நேரத்தில் எப்படியும் தனக்கு பரிசுத் தொகை கிடைக்காது என்ற எண்ணத்தில் சுனில் குமார் குப்பைத் தொட்டியில் லாட்டரி டிக்கெட்டை வீசிவிட்டு வழக்கம்போல வேலையை பார்க்க தொடங்கி விட்டார். ஆனாலும் அவர் மனதில் லாட்டரி சீட்டு பற்றிய எண்ணம் ஓடிக் கொண்டிருக்கிறது. 


இதனைத் தொடர்ந்து வீட்டின் குப்பைத் தொட்டியில் கிடந்த லாட்டரி சீட்டை தேடிப் பிடித்து எடுத்துள்ளார். அந்த லாட்டரி சீட்டில் உள்ள நம்பருக்கு பரிசுத் தொகை விழுந்துள்ளதா என பார்த்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சுனில் குமார் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.1 கோடி பரிசு விழுந்துள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து சுனில் குமாரும், அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடினர். உடனடியாக அந்த பரிசுத்தொகையை பெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.


பரிசுத்தொகையில் வரிகள் போக கிடைக்கும் பணத்தைக் கொண்டு அடமானம் வைத்த வீட்டை மீட்பதோடு, புதிய வீடு ஒன்றையும் கட்ட உள்ளதாக சுனில் குமார் தெரிவித்துள்ளார். மேலும் வாங்கிய கடன் அனைத்தையும் அடைக்க உள்ளதாகவும், தனக்கு இந்த பரிசை அளித்த கடவுளுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 




மேலும் படிக்க: Leo Box Office: விஜய்யின் ”லியோ”விற்கு சாதகமான தொடர் விடுமுறை.. உலகளவில் குவியும் வசூல் - 3வது நாள் நிலவரம் என்ன?