Leo Box Office: விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்திற்கு தொடர் விடுமுறை சாதகமாக அமைய, படத்தின் வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  


லியோ திரைப்படம்:


மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் கூட்டணியில் உருவான இரண்டாவது திரைப்படம் லியோ. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் கடந்த 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இதனால் திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டன. படம் கலவையான விமர்சனங்களையே பெற்றாலும், தொடர்ந்து வசூலை வாரிக்குவித்து வருகிறது.


வசூலில் புதிய சாதனை:


படத்திற்கு நிலவிய எதிர்பார்ப்பு காரணமாக முன்பதிவிலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன்படி, முதல் நாளிலேயே படம் உலகம் முழுவதும் 148.5 கோடி ரூபாயை வசூலாக அள்ளியதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. நடப்பாண்டில் இந்திய சினிமாவிற்கு கிடைத்த மிகப்பெரிய ஓப்பனிங் என கூறப்படுகிறது. அதோ, தமிழ் சினிமா ஒன்று முதல் நாளில் உலகளவில் ஈட்டிய மிகப்பெரிய வசூல் இது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜவான், ஜெயிலர் மற்றும் ஆதிபுருஷ் என நடப்பாண்டில் வெளியான பல ப்டங்களில் வசூல் சாதனையை தகர்த்ததோடு, முதல் நாளிலேயே 100 கோடி எட்டிய முதல் தமிழ் திரைப்படம் என்பது போன்ற சில புதிய மைல்கல்லையும் எட்டியது.


சரிந்த லியோவின் வசூல்:


முதல் நாளில் அபாரமான வசூலை ஈட்டிய லியோ, இரண்டாவது நாளில் வசூலில் சரிவை சந்தித்தது. வார நாள் என்பது இதற்கு காரணமாக கூறப்பட்டது. இதனால், இரண்டாவது நாள் அப்படத்தின் மொத்த வசூல் பாதியாக குறந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் ரூ.23.8 கோடி, கேரளாவில் ரூ.5.8 கோடி, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ. 5.3 கோடி மற்றும் கர்நாடகாவில் ரூ.4.3 கோடி வசூலித்தது. இந்தியாவின் மற்ற பகுதிகளில் மொத்தமாக ரூ.2.5 கோடியும் கிடைத்துள்ளது. அதன்படி, வெளிநாட்டு வசூலையும் சேர்த்து இரண்டாவது நாளில் மொத்தமாக ரூ.76.2 கோடி வசூலித்துள்ளதாக sacnik.com எனும் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மீண்டு எழும் லியோவின் வசூல்:


இந்நிலையில், நேற்று முதல் தொடர் விடுமுறை தொடங்கியிருப்பது லியோ படத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. அதன்படி, படத்தின் வசூலும் கணிக்க தொடங்கியுள்ளது. இதுதொடர்பான தகவல்களின்படி, மூன்றாவது நாளில் இந்தியாவில் மட்டும் லியோ திரைப்படம் 40 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இது முந்தைய நாளை காட்டிலும் சுமார் 12 சதவிகிதம் அதிகமாகும். இதன் மூலம், இந்தியாவில் லியோ படத்தின் வசூல் ரூ.150 கோடியை நெருங்கியுள்ளது. உலகளவில் மூன்றாவது நஆள் முடிவில் லியோ படத்தின் மொத்த வசூல் 270 கோடி ரூபாயை நெருங்கும் என திரைத்துறை வட்டாரங்கள் கணித்துள்ளது.


சாதகமான விடுமுறை:


இன்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கி அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி என தொடர்ந்து விடுமுறை நாட்களாக அமைந்துள்ளது. இது லியோ படத்தின் வசூலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக தான், பல திரையரங்குகளுக்கான டிக்கெட் முன்பதிவுகள் தற்போது ஹவுஸ்-புல் என காட்டுகின்றன. இதனால், விஜயின் லியோ படத்தின் மொத்த வசூல் அவரது முந்தைய படங்களில் வசூலை முறியடிக்கும் என நம்பப்படுகிறது.