கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஒரு தனியார் சட்டக் கல்லூரியின் ஆசிரியை ஒருவர் பணியிடத்தில் ஹிஜாப் அணிவதைத் தவிர்க்குமாறு நிறுவன அதிகாரிகளால் கேட்டுக் கொள்ளப்பட்டதாக கூறியதை அடுத்து, தனது பணியை ராஜினாமா செய்து வகுப்புகளுக்கு வருவதை நிறுத்தியுள்ளார். 


அந்த கல்லூரி பெண் ஆசிரியை ராஜினாமா செய்த விஷயம் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, கல்லூரி சார்பில் தாங்கள் எந்த தடையையும் விதிக்கவில்லை என்றும் இது தவறான புரிதலால் ஏற்பட்ட நிகழ்வு என்றும் தெரிவித்துள்ளது. 


என்ன நடந்தது..? 


கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைந்த தனியார் சட்டக் கல்லூரியான LJD சட்டக் கல்லூரியில் மூன்று வருடங்களாக ஆசிரியை சஞ்சிதா காதர் பணியாற்றி வந்துள்ளார். இந்தநிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இந்த சம்பவம் நிகழ்ந்தாக கூறப்படுகிறது. இதையடுத்து,  கடந்த வாரம் வகுப்பு எடுப்பதை நிறுத்தியுள்ளார் சஞ்சிதா காதர். 


மே 31க்குப் பிறகு பணியிடத்தில் ஹிஜாப் அணியக் கூடாது என்று கல்லூரி அதிகாரிகள் தனக்கு அறிவுறுத்தியதாகக் கூறி, கடந்த ஜூன் 5ம் தேதி சஞ்சிதா காதர் ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த ராஜினாமா கடிதத்தில், “ கல்லூரி நிர்வாக குழுவின் உத்தரவால் எனது மதிப்புகள் மற்றும் மத உணர்வுகள் புண்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ராஜினாமா செய்யும் நடவடிக்கையை எடுத்துள்ளேன்” என்று தெரிவித்திருந்தார். 


கல்லூரி நிர்வாகம் சார்பில் விளக்கம்: 


கல்லூரி பெண் ஆசிரியை சஞ்சிதா காதர் ராஜினாமா கடிதம் சமூக வலைதளங்களில்  வைரலானதை தொடர்ந்து, கல்லூரி அதிகாரிகள் அவரை தொடர்பு கொண்டு திரும்ப பணிக்கு வருமாறு தெரிவித்திருந்தது. அதில், தவறான தகவல் தொடர்பு (Miscommunication) காரணமாக ஏற்பட்ட பிரச்சனை இது. வேலை நேரத்தில் தலையில் முக்காடு அணிவதற்கு ஒருபோது தடை விதிக்கப்படவில்லை. இன்றுமுதல் மீண்டும் சஞ்சிதா காதை பணிக்கு வர அழைத்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 


தொடர்ந்து சஞ்சிதா காதர் பணியில் மீண்டும் சேருவது குறித்து விளக்கம் அளித்தார். அதில், “நேற்று கல்லூரி அலுவலகத்திலிருந்து எனக்கு மெயில் வந்தது. நான் மீண்டும் பணியில் சேரலாமா வேண்டாமா என்பதை யோசித்துதான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், இன்று கல்லூரிக்கு செல்லவில்லை” என்று தெரிவித்தார். 


கல்லூரி நிர்வாகக் குழு தலைவர் கோபால் தாஸ் கூறுக்கையில், "எந்த வழிகாட்டுதலும் தடையும் விதிக்கப்படவில்லை. கல்லூரி அதிகாரிகள் ஒவ்வொரு மதத்தினரின் மத உணர்வுகளையும் மதிப்பு அளிக்கிறார்கள். சில தொழில்நுட்ப காரணங்களால்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இத் தொடர்பாக சஞ்சிதா காதரிடம் நீண்ட நேரம் கலந்துரையாடினோம். மீண்டும் அவர் பணிக்கு திரும்புவார் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.