PM Modi 3.0 Cabinet: மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்களுக்கான, இலாகாக்கள் முறைப்படி ஒதுக்கப்பட்டுள்ளன.


மோடி தலைமையிலான அமைச்சரவை:


நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவில் தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. கடந்த இரண்டு முறையும் தேர்தல் முடிந்த பிறகு முறையே, 10 மற்றும் 7 நாட்களுக்குப் பிறகே பாஜக ஆட்சி அமைத்தது. ஆனால், இந்த முறை முடிவுகள் வெளியான நான்காவது நாளிலேயே, 72 பேருடன் மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது.  சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ்குமாரின்  ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன், விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டி இருந்தும் வெறும் 4 நாட்களில் அரசு பொறுப்பேற்றுள்ளது. இலாகாக்களும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில்,   கிங்மேக்கர்களாக உருவெடுத்துள்ள சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆகிய இருவருமே செல்வாக்கு மிக்க சபாநாயகர் பதவிக்கே முக்கியத்துவம் கொடுப்பதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன. 


மக்களவை சபாநாயகர் பதவி:


மக்களவை சபாநாயகர் பதவி சிக்கலானது மற்றும் நுட்பமானது. சபாநாயகர் குறிப்பிட்ட கட்சியின் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்ட போதிலும், கட்சி சார்பற்ற முறையில் சபையை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் செயல்முறை புதிய மக்களவையின் முதன்மையான நடவடிக்கைகளில் ஒன்றாகும். ஆரம்பத்தில், ஒரு தற்காலிக சபாநாயகர், பொதுவாக நீண்ட காலம் பதவி வகித்த எம்.பி., ஆரம்ப கூட்டங்களுக்கு தலைமை தாங்கவும், புதிய எம்.பி.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதற்கும், சபாநாயகர் தேர்தலை நடத்துவதற்கும் தேர்ந்தெடுக்கப்படுவார்.  சபாநாயகர் மக்களவையில் விவாதிக்கப்பட வேண்டிய மசோதாக்களை இறுதி செய்பவராக இருக்கிறார். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மற்றும் தகுதி நீக்கம் தொடர்பான விஷயங்களில் குறிப்பிடத்தக்க அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார். 


சபாநாயகர் வரலாறு:


இந்திய தேசிய காங்கிரஸின் (INC) ஜி.வி.மாவலங்கர் சுதந்திர இந்தியாவின் முதல் சபாநாயகர் ஆவார். ஜனதா கட்சியைச் சேர்ந்த நீலம் சஞ்சீவ ரெட்டி, காங்கிரஸ் அல்லாத முதல் சபாநாயகராக இருந்தார்.  INC(I) இன் பல்ராம் ஜாகர், இரண்டு மக்களவைகளில் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் பணியாற்றி, மிக நீண்ட காலம் சபாநாயகர் பதவி வகித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். கடந்த இரண்டு தேர்தல்களின் முடிவில், பாஜகவைச் சேர்ந்த சுமித்ரா மகாஜன் மற்றும் ஓம் பிர்லா ஆகியோர் சபாநாயகராக பதவி வகித்தனர்.


சபாநாயகர் பதவியை குறிவைப்பது ஏன்?


சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ் குமார் ஆகிய இருவரும் அனுபவமிக்க அரசியல்வாதிகள். அதனை நிரூபிக்கும் விதமாகவே சபாநாயகர் பதவியை 'காப்பீடு' வடிவத்தில் தங்களது கையிருப்பில் வைத்திருக்க விரும்புகின்றனர். சமீப ஆண்டுகளில் ஆளும் கட்சிகளுக்குள் பல உட்கட்சி மோதல்கள் நடந்துள்ளன. இது பிளவுகளுக்கு வழிவகுத்தது மற்றும் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மற்றும் சரத் பவார் தலைமையிலான என்சிபி பிளவுகள் போன்றவை ஆட்சி கவிழ்ப்பிற்கும் வழிவகுத்தன. இத்தகைய சூழலில், கட்சித் தாவல் தடைச் சட்டம் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. அவை சபாநாயகருக்கு கணிசமான அதிகாரத்தை வழங்குகின்றன. சட்டத்தின்படி, "தலைவர் அல்லது அவைத் தலைவரே, உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்வது தொடர்பான வழக்குகளைத் தீர்ப்பதில் முழு அதிகாரம் கொண்டுள்ளார்".


ஆளும் கட்சி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றிருக்கும் போது, ​​சபாநாயகரின் பங்கு பெரும்பாலும் சம்பிரதாயமாகவே பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், கூட்டணி அரசாங்கங்களில், சபாநாயகரின் அதிகாரம் முக்கியத்துவம் பெறுகிறது. பாரம்பரியமாக, சபாநாயகர் பதவி ஆளும் கட்சிக்கே ஒதுக்கப்படுகிறது.  அதேநேரம், கூட்டணி ஆட்சியில் தேவை கருதி கூட்டணியில் உள்ள சிறிய கட்சிக்கும் சபாநாயகர் பதவி வழங்கப்படுகிறது.


ஒரு குறிப்பிடத்தக்க முன்னுதாரணமாக, வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில், டிடிபியின் ஜிஎம்சி பாலயோகி சபாநாயகராக பணியாற்றினார். தமக்கான பதவியைக் கோருவதற்கு இந்த நிகழ்வை தெலுங்குதேசம் மேற்கோள் காட்டலாம். இதற்கிடையில், JD(U) க்கு இந்த பதவி முக்கியமானதாக கருதப்படுகிறது. காரணம் கடந்த ஆண்டு பாஜக கூட்டணியில் இருந்து விலகியபோது, அவர்கள் தனது கட்சியை உடைக்கப் பார்ப்பதாக  நிதிஷ் குமார் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, தங்கள் கட்சி எம்.பிக்கள் பாஜகவிற்கு தாவுவதை தடுக்க, சபாநாயகர் பதவியை சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் குறிவைத்துள்ளனர். அதன் காரணமாகவே அமைச்சரவையில் கூட மிக முக்கிய இலாகாக்களை விட்டுக் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.