கொல்கத்தாவில் அகில இந்திய இந்து மகாசபை நடத்திய துர்கா பூஜை பந்தலில், மகிசாசூரனுக்கு பதிலாக மகாத்மா காந்தி சிலை வைக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழுத்தத்திற்கு பிறகு பூஜை ஏற்பாடு செய்தவர்கள் காந்திக்கு பதிலாக மீண்டும் மகிசாசூரன் முகத்தை மாற்றியுள்ளனர். 


இதுகுறித்து இந்திய இந்து மகாசபாவின் மேற்கு வங்க மாநிலப் பிரிவின் செயல் தலைவர் சந்திரச்சூர் கோஸ்வாமி தனியார் செய்தி நிறுவனத்திற்கு தெரிவிக்கையில், "நாங்கள் காந்தியை உண்மையாகவே அசுரனாகப் பார்க்கிறோம். அவர்தான் உண்மையான அசுரர். அதனால்தான் அவரை இப்படிச் செய்தோம்.


மத்திய அரசு மகாத்மா காந்தியை கொண்டாடுகிறது. எனவே, நாங்கள் அத்தகைய கருத்தை அகற்றி மாற்றவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். காந்தியை எல்லா இடங்களிலிருந்தும் அகற்றி, அவருக்கு பதிலாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் மற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை முன் நிறுத்த வேண்டும்” என்று தெரிவித்தார். 






புராணங்களின்படி,  மகிசாசூரனின் தீய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர துர்கா தேவி அவதாரம் எடுத்து காலில் வைத்து மகிசாசூரனை வதம் செய்தார். அந்த மகிசாசூரன் இடத்தில் காந்தி சிலை வைத்தது மிகவும் கண்டனத்திற்குரியது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


துர்கா தேவியின் காலுக்கு இடையில் காந்தி சிலை இருந்ததை புகைப்படம் எடுத்து ஒரு பத்திரிகையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதையடுத்து இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாரதிய ஜனதா, சிபிஐ-எம், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.






தொடர்ந்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸின் மாநில செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் கூறுகையில், “இது தேசத்தந்தைக்கு அவமானம். இது நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அவமதிக்கும் செயலாகும். இப்படிப்பட்ட அவமதிப்பு பற்றி பாஜக என்ன சொல்லும்? இவர்கள் காந்திஜியைக் கொன்றவரின் கூட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்” என்று தெரிவித்தார்.