கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் , முதுநிலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம்  நாடு முழுவதும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இது சம்பவம் தொடர்பாக, சஞ்சய் ராவத் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும், இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி  கொல்கத்தா உயர்நீதிமன்றமானது உத்தரவிட்டது.


மாணவியின் தந்தை பேட்டி:


இந்நிலையில், முதுகலை பயிற்சி மாணவி உயிரிழப்புக்கு நீதி கேட்டு, நாடு முழுவதும் மருத்துவர்கள் போராடி வருகின்றனர். அவசர சிகிச்சைப் பிரிவு இயங்கும் என்றும் புறநோயாளிகள் பிரிவை மட்டுமே புறக்கணித்துள்ளதாக தெரிவித்தனர் .


இந்த தருணத்தில், உயிரிழந்த முதுகலை பயிற்சி மாணவியின் பெற்றோர்கள் ஏ.என்.ஐ செய்தி முகமைக்கு பேட்டியளித்துள்ளனர். மாணவியின் தந்தை தெரிவித்துள்ளதாவது, “  விசாரணையில் எந்த முடிவும் வெளிவரவில்லை. முடிவு கிடைக்கும் என்று நம்புகிறோம். கல்லூரியில் இருந்து யாரும் எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை. முழுத் துறையும் இதில் சம்பந்தப்பட்டுள்ளது.






"முதல்வர் நீதி வழங்குவது பற்றி பேசுகிறார், ஆனால்  நீதி கோரிய பொது மக்களை சிறையில் அடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதல்வர் மீது எங்களுக்கு திருப்தி இல்லை. இழப்பீடை வாங்க மறுத்துவிட்டோம்," என்று அவர் மேலும் கூறினார்.


மாணவியின் தாய் பேட்டி


பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் தெரிவித்ததாவது "முதலில் உங்கள் மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்தது, பின்னர் அழைப்பு துண்டிக்கப்பட்டது. அதன்பிறகு, நான் போன் செய்து என்ன நடந்தது என்று கேட்டபோது, ​​அவர்கள் என்னை மருத்துவமனைக்கு வரச் சொன்னார்கள்.


நாங்கள் அங்கு சென்றதும், பார்க்க அனுமதிக்கப்படவில்லை, 3 மணிக்கு அனுமதித்தனர்.  அப்போது அவளது உடலில் ஒரே ஒரு துணி மட்டுமே இருந்தது. அவள் கை உடைந்திருந்தது, அவள் கண்கள், வாயில் இருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. அவளைப் பார்க்கும்போது யாரோ அவளைக் கொன்றுவிட்டதாகத் தோன்றியது. இது தற்கொலையல்ல, கொலை என்று சொன்னேன். எங்கள் மகளை மருத்துவராக்க நாங்கள் மிகவும் கடினமாக உழைத்தோம் ஆனால் அவள் கொலை செய்யப்பட்டாள்.






இறந்த மருத்துவரின் பெற்றோர்கள், ஆகஸ்ட் 9 ஆம் தேதி, தங்கள் மகள் பணிபுரிந்த மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்டதாக தொலைபேசி மூலம் தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.  இருப்பினும், கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் கூறுகையில், போலீஸ் படையில் இருந்து யாரும் இதுபோன்ற தகவல்களை தெரிவிக்க பெற்றோரை தொடர்பு கொள்ளவில்லை என தெரிவிக்கிறார்.


இந்நிலையில், தற்போது பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கு, நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் மட்டுமன்றி மக்களும் குரல் கொடுத்து வருகின்றனர். மேலும், பாதுகாப்புக்கு உரிய சட்டத்தை மத்திய – மாநில அரசுகள் கொண்டு வர வேண்டும் என கோரிக்கைகள் வைத்து வருகின்றனர்.