மத்திய பாரதிய ஜனதா அரசின் புதிய அமைச்சரவை விரிவாக்கப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 43 பெயர்கள் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் 7 பெண் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். மீடியா அறிந்த முகங்களான ஜோதிராதித்ய சிந்தியா, மீனாட்சி லேகி உள்ளிட்ட பெயர்கள் பட்டியலில் உள்ளன. இது தவிர பட்டியலில் உள்ளவர்களில் 13 வழக்கறிஞர்கள், 7 முன்னாள் அரசு அதிகாரிகள், 6 மருத்துவர்கள், 5 பொறியாளர்கள் உள்ளனர்.
ஏற்கனவே, மத்திய அரசின் அமைச்சரவையில் நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி இராணி, ரேணுகா சிங், சத்வி நிரஞ்சன் ஜோதி போன்ற பெண் அமைச்சர்கள் இடம் பெற்றுள்ள நிலையில், மேலும் புதிதாக 7 பெண்கள் அமைச்சரவையில் இன்று இணைந்துள்ளனர்.
1. அனுப்பிரியா சிங் படேல்
உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரைச் சேர்ந்த அனுப்பிரியா சிங் படேல், எம்.பி.ஏ பட்டப்படிப்பு படித்தவர். எம்.எல்.ஏவாக பதவி வகித்து, பின் மிர்சாபூரில் இருந்து இரண்டாவது முறை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர். மாநில சுகாதார துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர்.
2. சுஸ்ரீ ஷோபா கரந்லஜே
கர்நாடக மாநிலம், தக்ஷின கன்னடா பகுதியைச் சேர்ந்தவர் சுஸ்ரீ ஷோபா கரந்லஜே. 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் ஈடுபட்டு வருபவர். உடுப்பி சிக்மகளூர் தொகுதியில் இருந்து இரண்டாவது முறை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர்.
3. தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ்
குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த 60 வயதான தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், பி.காம் பட்டப்படிப்பு படித்தவர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக பொது பணியில் ஈடுபட்டு வருபவர், சூரத் தொகுதியில் இருந்து மூன்றாவது முறை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
4. மீனாக்ஷி லேகி
டெல்லியைச் சேர்ந்த 54 வயதேயான மீனாக்ஷி லேகி, டெல்லி பல்கலையில் எல்.எல்.பி பட்டம் படித்தவர். உச்சநீதி மன்ற வழக்கறிஞராகவும், சமூக செயற்பாட்டாளராகவும் பணியாற்றி வருபவர். புது டெல்லியில் இருந்து எம்.பியாகதேர்ந்தெடுக்கப்பட்டவர். தனது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து கருத்துக்களை பதிவு செய்பவர்.
5. அனுப்புரானா தேவி
ஜார்க்கண்ட மாநிலம், வடக்கு சோட்டாநாக்பூர் பகுதியைச் சேர்ந்த 51 வயதான அனுப்புரானா தேவி, கொடர்மா தொகுதியில் இருந்து எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். ஜார்க்கண்ட மற்றும் பீகார் மாநிலத்தில் இருந்து 4 முறை எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். அரசியல் பயணத்தை தொடங்கி, தனது 30 வயதில் பீகார் அரசின் அமைச்சரவையில் பதவி வகித்தவர்.
6. பிரதிமா பெளமிக்
திரிப்புரா மாநிலம் அகர்டலாவைச் சேர்ந்த 52 வயதான பிரதிமா பெளமிக், எளிமையான விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். திரிபுரா மேற்கு தொகுதியில் இருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
7. பாரதி பிரவின் பவர்
மகாராஷ்டிரா மாநிலம் கந்தேஷ் நகரைச் சேர்ந்த 42 வயதான பாரதி பிரவீன் பவர், அரசியல் பயணத்தை தொடங்குவதற்கு முன்பு மருத்துவராக பணியாற்றியவர். மகாராஷ்டிரா திந்தோரி தொகுதியில் இருந்து எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர்.