இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமையை பெற்றவர் கிரண் பேடி. ஐபிஎஸ் பணியில் இருந்து ஓய்வு பெற்ற அவர், 2015-ம் ஆண்டு காலக்கட்டத்தில் பாஜகவில் இணைந்தார். பின்னர் புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் அவர் பதவி வகித்தார். தற்போது தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் கிரண்பேடி, அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
நூல் வெளியீடு
இந்நிலையில், புதுச்சேரி மாநில கவர்னராக கிரண் பேடி இருந்த காலத்தில் நடந்தவற்றை, 'பியர்லெஸ் கவர்னன்ஸ்' என்ற தலைப்பில், புத்தகமாக அவர் எழுதியுள்ளார். எளிதில் அணுகும் வகையிலான, மக்களை மையமாகக் கொண்ட நிர்வாகம் மேற்கொள்வது தொடர்பான தகவல்களை, இந்த புத்தகம் வாயிலாக அவர் பகிர்ந்துள்ளார்.ஆங்கிலத்தில் எழுதப்பட்ட, 'பியர்லெஸ் கவர்னன்ஸ்' புத்தகத்தை ஷிவானி அரோரா, சபரிநாதன் ஆகியோர், 'அச்சமற்ற ஆட்சி' என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளனர். இந்த நுாலின் வெளியீட்டு விழா, சென்னையில் 'ரெயின் ட்ரீ' ஹோட்டலில் இரு தினம் முன்பு நடைபெற்றது.
கிரண் பேடி பேச்சு
சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன வேந்தர் மரியஸீனா ஜான்சன், புத்தகத்தின் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கிரண் பேடி ஏற்புரை ஆற்றினார். அப்போது அவர், சீக்கியர்களின் அறிவாற்றலை கிண்டல் செய்யும் விதமான நகைச்சுவையை மேடையில் கூறினார்.
வீடியோ வைரல்
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து, நாடு முழுவதும் உள்ள சீக்கிய அமைப்புகள் கிரண் பேடிக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் பொறுப்பாளர் ஜர்னைல் சிங் வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு உயிர்நீத்தவர்களில் பெரும்பாலானோர் சீக்கியர்கள். முகலாயர்கள் நமது பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற போது அவர்களை எதிர்த்து போராடியவர்கள் சீக்கியர்கள். நாட்டுக்காக தங்களையே அர்ப்பணிக்கும் இனமான சீக்கிய இனத்தை இன்னும் எத்தனை காலத்திற்கு தான் கேலி செய்வீர்கள். தனது கீழ்த்தரமான பேச்சுக்காக கிரண் பேடி மன்னிப்பு கேட்க வேண்டும்" என அவர் கூறியுள்ளார்.
ட்விட்டரில் மன்னிப்பு
இந்நிலையில், தனது பேச்சுக்காக கிரண் பேடி ட்விட்டரில் மன்னிப்பு பதிவை இன்று வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், "எனது சமூகத்தின் மீது மிகுந்த மரியாதையை வைத்திருக்கிறேன். பாபா நானக்கின் தீவிர பக்தை நான். எனது பேச்சை யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். எனது பேச்சு யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பஞ்சாபை சேர்ந்தவரான கிரண் பேடியின் தாயார் சீக்கிய மதத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்