உலகில் எங்கே இருந்தாலும் இந்தியர் என்று சொல்கிற பெருமையை நாம் விட்டுவிடக்கூடாது, அதில் ஒரு துளியும் குறைந்து விடவும் கூடாது என பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசம் வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமத்தை பிரதமர் மோடி கடந்த மாதம் தொடங்கி வைத்தார். 75ஆவது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடக்கும் இந்த நிகழ்வுக்கு ஏற்கனவே தமிழ்நாட்டில் இருந்து பல குழுக்களாக பாரம்பரிய கலைஞர்கள் உத்தரபிரதேசம் சென்றிருந்தனர்.
பழங்காலம் தொட்டே தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் உள்ள தொடர்பை கொண்டாடும் விதமாக இந்த சங்கமம் தொடங்கப்பட்டது. பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் இந்த கொண்டாட்ட விழா நடைபெற்றது.
இந்நிலையில், காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளில் குஷ்பு நேற்று (டிச.01) சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். உத்தரப் பிரதேச அமைச்சர் சஞ்சீவ் கோண்ட் இந்நிகழ்வில் பங்குபெற்ற நிலையில், குஷ்பு கௌரவிக்கப்பட்டார்.
பின்னர் பத்திரிகை தகவல் அலுவலகத்துக்கு சிறப்பு பேட்டி அளித்த அவர், ”ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பது மாண்புமிகு பிரதமரின் தாரக மந்திரமாக உள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “காசியும் தமிழும் மிகவும் பிரபலமானது. பிரதமர் எங்கு சென்றாலும் திருக்குறளின் பெருமையைப் பேசுகிறார். பாரதியார் கவிதைகளை மேற்கோள் காட்டி பேசுகிறார். தமிழ் மொழி மீது மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்.
இந்தியர்கள் என்று சொல்வதற்கு மிகுந்த பெருமையாக இருக்கிறது. இந்த உணர்வில் எப்போதும் ஒரு துளியும் குறையக் கூடாது. இதுவே நமது வாழ்க்கையை பெருமைப்படுத்தும் என்பதை அடுத்தத் தலைமுறைக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்ததற்காக பிரதமர் மோடியை புகழ்ந்து 'தமிழ்' என பதிவிடுவதற்கு பதிலாக 'தமில்' என குஷ்பு பதிவிட்டதால் நெட்டிசன்கள் அவரைக் கேலி செய்த சம்பவம் நிகழ்ந்தது.
"இன்று உலகம் முழுவதும் தமிழ் அறியப்படுகிறது. தமிழர்கள் மற்றும் அவர்களின் கலாசாரத்திற்கான மரியாதை இரட்டிப்பாகியுள்ளது. ஏனெனில், நீங்கள் அதை உலகளவில் எடுத்து சென்றுள்ளீர்கள். நாங்கள் எப்போதும் உங்களுக்குக் கடமைப்பட்டிருப்போம். உங்களைப் பின்பற்றுபவராக மட்டுமல்ல, தமிழ்நாட்டின் குடிமகனாகவும். மிக்க நன்றி. தமில் வாழ்க! தமில் மொழி வாழ்க!" என குஷ்பு ட்விட் செய்திருந்தார்.
அவரது பதிவிற்கு கீழே நெட்டிசன்கள் அவரை விமர்சித்து பதிவிட்டிருந்தனர். இதையடுத்து, நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு பதிலளித்த குஷ்பு, "ஒவ்வொரு நாளும் ஒரு கற்றல் அனுபவம்தான். படிப்பதை நிறுத்தவே முடியாது. நீங்கள் கற்றுக் கொள்ளும்போது தவறுகள் நடக்கும். ஆனால், அதுதான் மனித இயல்பு. உங்கள் தவறுகளை பெரிய மனதுடன் ஏற்றுக்கொண்டு அடுத்த முறை சிறப்பாக செயல்படுவேன் என்று உறுதியளிக்கிறேன். நான், கண்டிப்பாக செய்வேன்" எனப் பதிவிட்டார்.
இருப்பினும், தொடர் விமர்சனத்திற்கு உள்ளானதால் கடுப்பான குஷ்பு, "ஐயோ.. ஏழை திராவிட இனமே. என் தவறுகளை ஏற்றுக்கொள்ளும் தைரியம் எனக்கு இருக்கிறது. உங்கள் உண்மையான முகங்களைக் காட்ட முதுகெலும்பு வேண்டும். உண்மையான தமிழன் ஒரு போதும் முகமூடிக்கு பின்னால் ஒளிந்து கொள்ள மாட்டான்" எனவும் பதிவிட்டிருந்தார்.