கேரளாவின் குரும்பச்சி பகுதியில் மலை இடுக்கில் சிக்கி தவித்த 23 வயது இளைஞர் பாபு நீண்ட போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார். 43 மணி நேர போராட்டத்திற்கு பின் இந்திய ராணுவ வீரர்கள் மீட்டனர்.
பாலக்காடு மழப்புழா மலையில் டிரெக்கிங் செல்லும் போது மலைமுகட்டில் சிக்கிய மாணவர் மீட்கப்பட்டார். 45 மணி நேரமாக மலைமுகட்டில் சிக்கி உணவு, தண்ணீரின்றி போராடி வந்தவரை அருகே ஒரு இடம் கண்டுபிடித்து அதன்மூலம் உணவு மற்றும் தண்ணீர் கொடுத்து, பிறகு மலையேறும் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் மூலம் மீட்டுள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் அந்த நபரை மீட்டதாகவும் ராணுவத்தினர் தெரிவித்தனர்.
தற்போது, பாபுவை ராணுவத்தினர் மீட்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அத்துடன், மீட்கப்பட்ட பிறகு அந்த நபர், ராணுவ வீரர்களுக்கு முத்தங்கள் கொடுத்து தனது நன்றியை தெரிவிக்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது.
நடந்தது என்ன..?
கேரளா மாநிலம் மலப்புழா பகுதியில் உள்ள சேராட் கிராமத்தை சேர்ந்தவர் ஆர் பாபு. இவர் அங்கு இருக்கும் குறம்பாச்சி மலைப்பகுதியில் மலையேற்றம் செய்ய சென்று இருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன் தனது மூன்று நண்பர்களுடன் அவர் அங்கு மலையேற்றம் செய்து இருக்கிறார். ஆனால் மலையில் ஏறிவிட்டு இறங்கும் போது பாபு தவறி கீழே விழுந்துள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக மலைக்கு கீழே விழாமல் முகடு ஒன்றில் குதித்து தப்பித்து உள்ளார். அதாவது மலைக்கு நடுவே குகை போல இருக்கும் அமைப்பு ஆகும் இது. ஆள் செல்ல முடியாத இந்த இடத்தில் பாபு தவறி கீழே விழுந்துள்ளார். கடந்த பிப்ரவரி 7ம் தேதி உள்ளே விழுந்தவர் கடந்த 43 மணி நேரமாக அந்த மலை முகட்டில் சிக்கி தவித்துக்கொண்டு இருக்கிறார். முதலில் அவரை மீட்க அவரின் நண்பர்கள் முயன்று உள்ளனர். அங்கு இருந்த குச்சி, கம்புகள், கயிறுகளை வைத்து அவரை மீட்க முயன்று உள்ளனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து கீழே வந்த நண்பர்கள் உள்ளூர் ஆட்களிடமும், தீயணைப்பு துறையிடமும் தெரிவித்துள்ளனர்.
பிப்ரவரி 7ம் தேதி இரவு 12 மணிக்கு தீயணைப்பு படையினர் அங்கு வந்து கேம்ப் அமைத்தனர். அவரை மீட்கும் பணி இரவில் இருள் காரணமாக செய்யப்படவில்லை. மறுநாள் தொடங்கப்பட்ட மீட்பு பணி ஓயாமல் நடந்து இப்போது தான் பத்து மணி அளவில் அந்த மாணவர் காப்பாற்றப்பட்டுள்ளார். பாபு இருக்கும் முகட்டு பகுதி யாராலும் எட்ட முடியாத இடத்தில் இருந்ததால் காப்பாற்றுவதற்கு தாமதம் ஆகி உள்ளது. கயிறு மூலம் அவரை தொட முடியாததால் அவரை காப்பாற்ற கொச்சி கடலோர காவல் படை ஹெலிகாப்டர் களமிறங்கியது. ஆனால் ஹெலிகாப்டர் வந்தும் கூட அவரை காப்பாற்ற முடியாமல் மீட்புத்துறையினர் திண்டாடினர். மலை முகடு கரடு முரடாக இருப்பதால் ஹெலிகாப்டர் பாபு இருக்கும் பகுதிக்கு அருகில் செல்ல முடியவில்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து தற்போது பாலக்காடு ஆட்சியர் கடற்படையின் உதவியை நாடினார். கடற்படை பயன்படுத்தும் நவீன ஹெலிகாப்டர்களை வைத்து அவரை மீட்க கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அவர்களின் ஹெலிகாப்டர் மீட்பு பணிக்காக களமிறங்கியது. ஹெலிகாப்டரில் இருந்து கயிறை வீசி அதை பிடித்து மேலே வரும்படி பாபுவிற்கு அதிகாரிகள் ஆலோசனை வழங்கினார். ஆனால் மலை முகட்டில் இருந்து கையை பிடிக்க முடியாத காரணத்தால் அந்த திட்டமும் கைவிடப்பட்டது.
அந்த மலைமுகட்டிற்கு அருகே இருக்கும் பகுதிக்கு ராணுவத்தினர் சென்றுள்ளனர். அங்கிருந்து கயிறு மூலம் அந்த இளைஞருக்கு உணவு வழங்கப்பட்டது. அதேபோல் தண்ணீரும் அந்த இளைஞருக்கு வழங்கப்பட்டது. அவர் அருகில் சென்ற ராணுவத்தினர், நீங்கள் இனி தண்ணீர் கேட்டு கத்த வேண்டாம் . அது உங்கள் எனர்ஜியை மேலும் போக்கும். நீங்கள் கவனமாக இருங்கள். உங்களை காப்பாற்றி விடுவோம் என்று கூறி உள்ளனர். ஹெலிகாப்டர் முயற்சிகள் எல்லாம் தோல்வி அடைய, மலைகளில் ஏறும் பயிற்சி எடுத்த சிறப்பு ராணுவ படை வீரர்கள் இந்த மீட்பு பணியில் குதித்த பிறகே அவரை காப்பாற்ற முடிந்தது. மலையில் ஏறும் வீரர்கள் கயிறு வைத்து ஏறி பாபுவிற்கு அருகே சென்று அவரை மீட்டு அழைத்து வந்துள்ளனர். பாபு ஆரோக்கியமாக இருப்பதாகவும், அவருக்கு காலில் மட்டும் காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் ராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
Also Read | Gautham Karthik Manjima Wedding: மஞ்சிமா மோகனை திருமணம் செய்யும் கெளதம் கார்த்திக்.. முழு விபரம் உள்ளே..!