சிறிய டீக்கடை வருமானத்தைக்கொண்டு  கடந்த 14 ஆண்டுகளில் 25 நாடுகளை தன் மனைவியுடன் வலம் வந்த கேரள டீக்கடைக்காரர் கே. ஆர் விஜயன் மாரடைப்பால்  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


நம் வாழ்க்கையில் சரியான திட்டமிடல் இருந்தால் கனவுகளை நினைவாக்கலாம் என்பதற்கு சிறந்த உதாரணமாக விளங்கி வந்தனர் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த விஜயன் மற்றும் மோகனா தம்பதிகள்.  கேரள மாநிலம் கொச்சினில் காந்திநகர் பகுதியில் பாலாஜி என்கிற பெயரில்  டீக்கடை ஒன்றை நடத்தி வந்தனர்  71 வயதான கே.ஆர் விஜயன் மற்றும் 69 வயதான மோகனா. இவர்கள் இருவருக்கும் உலகைச்சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை சிறுவயதில் இருந்தே இருந்ததாககவும், ஆனால் இதற்குப்  பணம் ஒரு தடையாக இருந்து வந்துள்ளது. இந்தச் சூழலில் தான், கடந்த 1963 ஆம் ஆண்டு டீக்கடை ஒன்றை ஆரம்பித்தார் விஜயன், இதன் மூலம் வரும் வருமானத்தைக்கொண்டு உலகத்தைச் சுற்றி வரலாம்  என்ற முடிவு எடுத்த இவர்களின் கனவு நினைவானது.  இமயமலைக்கான நீண்ட பயணத்துடன் தொடங்கிய இவர்களின் சுற்றுலா ரஷ்யாவுடன் முடிவடைந்துள்ளது.





ஆம் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு எந்த நாட்டிற்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியவில்லை என்ற வருத்தத்தில் இருந்தவர்கள், தொற்றின் தாக்கம் சற்று குறைந்த நிலையில் கடந்த அக்டோபர் ரஷ்யா செல்ல திட்டமிட்டு அந்த பயணத்தை வெற்றிக்கரமாக முடித்தனர்.  மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிய நிலையில் தான் நேற்று 71 வயதான விஜயனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.  ஒவ்வொரு முறையும் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது கடைக்கு முன்னதாக நாங்கள் சுற்றுலாவிற்கு சென்றுவிட்டதாக அறிவிப்பு பலகையைப்பார்த்து வியப்பில் ஆழ்ந்தவர்கள் எல்லாம் விஜயனின் மரண செய்தியைக்கேட்டு சோகத்தில் மூழ்கியுள்ளனர்.


இந்நேரத்தில் இதுவரை மேற்கொண்ட பயணம்…அவர்கள் பகிர்ந்துக்கொண்ட கருத்துக்களையெல்லாம் சற்று நினைவுக்கூருவோம்..


டீக்கடை வருமானம் மட்டுமே எங்களின் மூலதானம். வேறு எதுவும் இல்லை. இக்கடையில் யாரையும் பணிக்கு வைத்தால் தேவையில்லாத செலவு என்பதோடு எங்களின் சுற்றுலா ஆசையை நிறைவேற்ற முடியாது என்பதால் நாங்களே முதலாளிகளாவும், தொழிலாளர்களாகவும் டீக்கடையில் பணியாற்றிவருகிறோம் என மகிழ்ச்சியுடன் சென்ற மாதம் பகிர்ந்திருந்தனர் விஜயன் – மோகனா தம்பதியினர்.. மேலும் இதுவரை
சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து,நியூயார்க் , பிரேசில்,அர்ஜென்டினா,  பெரு உள்ளிட்ட நாடுகளுக்குப் பறந்துள்ள இத்தம்பதிகள், இப்படி உலக நாடுகளைச்சுற்றும் பொழுதெல்லாம்  பல்வேறு கலாச்சாரங்களைத் தெரிந்துக்கொள்ள முடிகிறது எனவும் இதன் மூலம் வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை வருவதாகக் கூறியிருந்தார் விஜயன்.  





மேலும் கடந்த 14 ஆண்டுகளில் எங்களது உலக நாடுகளுக்கிடையேயான சுற்றுப்பயணம் இன்னும் முடியவில்லை. என்று கடந்த மாதம் கூறிய நிலையில் தான் இந்தாண்டு விஜயனின் உயிர் பிரிந்தது.  உழைப்பினால் தனது கனவையும், சந்தோஷத்தையும் நிறைவேற்றிய இவர்களின் மற்ற கணவன் – மனைவியினருக்கு சிறந்த உதாரணமாக இருந்துவந்தார்கள் என்பது தான் நிதர்சன உண்மை. இவரைப்போன்று எந்த வேலை செய்தாலும் மன மகிழ்வோடும், ஈடுபாடோடும் செய்தால் கண்டிப்பாக கனவு மெய்ப்படும்.