உத்தரப் பிரதேசம், ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் பள்ளி வகுப்பறையிலேயே மது அருந்திய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சைலேந்திர சிங் கௌதம் எனப்படும் இந்த ஆசிரியர் பீர் கேன்களுடன் வகுப்பறையில் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்நிகழ்வு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வீடியோவில் வகுப்பில் அமர்ந்து கொண்டே பீர் கேன்களை மறைத்து வைத்துக் கொண்டு போதையில் பேசும் அவர், வீடியோ எடுப்பவர்களிடம் “என்னை எத்தனை வீடியோக்கள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்” எனக் கூறுகிறார்.
இந்த வீடியோ இணையத்தில் முன்னதாக வைரலானதை அடுத்து ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியர், ஆசிரியர் மீது தக்க நடவடிக்க எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும், பள்ளி ஆசிரியர் முன்னதாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே போல் முன்னதாக உத்தரப் பிரதேசத்தில் எழுத்துப் பிழை செய்த தலித் மாணவரை பள்ளி ஆசிரியர் கடுமையாகத் தாக்கியதில் மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சமூக அறிவியல் தேர்வில் எழுத்துப் பிழை செய்ததால், செப்டம்பர் 7ம் தேதி அன்று சிறுவன் பள்ளி ஆசிரியர் அஷ்வினி சிங்கால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுவனான நிகித் டோஹ்ரே, அண்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அன்றிரவே உயிரிழந்தார்.
பள்ளியில் நடந்த சமூக அறிவியல் தேர்வின் போது, ஒரு வார்த்தையை தவறாக உச்சரித்ததால், மயங்கி விழும் வரை, ஆசிரியர் மகனைத் தாக்கியதாகவும், மயங்கி விழும் வரை உதைத்ததாகவும், காவல் துறையில் அளித்த புகாரில், சிறுவனின் தந்தை கூறியுள்ளார்.
சிறுவனின் சிகிச்சைக்காக ஆசிரியர் முதலில் 10,000 ரூபாய் கொடுத்ததாகவும், பின்னர் 30,000 ரூபாய் கொடுத்ததாகவும், ஆனால் பின்னர் அவரது தொலைபேசி அழைப்புகளை ஏற்கவில்லை என புகாரில் கூறப்பட்டுள்ளது. சிறுவனின் தந்தை, ஆசிரியரை சந்தித்தபோது, சாதிய வார்த்தைகளை சொல்லி மோசமாகத் திட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.