இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்தியின்படி, கேரளாவின் இடுக்கி, பாலக்காடு மற்றும் மலப்புரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு உள்ளது. இந்த 3 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய கூடும். மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய கூடும் என தெரிவித்து உள்ளது.

Continues below advertisement

கேரளாவின் பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டு உள்ளது. இதேபோன்று, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டு உள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு  மஞ்சள் அலர்ட் விடப்பட்டு உள்ளது. நாளை திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டு உள்ளது.

Continues below advertisement

மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு வருகிற 24-ந்தேதிக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், இடுக்கி மாவட்டத்தில் இன்று அங்கன்வாடி, நர்சரி, பள்ளி மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆன்லைன் வகுப்புகளை நடத்தும்படி, இடுக்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். பாலக்காடு மாவட்டத்திலும்  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், கல்லூரிகள் மற்றும் நவோதயா பள்ளிகளுக்கு, உறைவிட பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது.

இதேபோல் கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால், முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு உயர்ந்திருக்கிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் 13 மதகுகளும் 1.5 மீ அளவுக்கு திறக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், மழை மேலும் தீவிரமடைந்தால் அணையிலிருந்து உப நீர் திறப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. இதனால் அணையை ஒட்டியுள்ள பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. முல்லை பெரியாறு அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டால் அது தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஏனெனில் அணையில் இருந்து இரண்டு வழிகளில் நீர் வெளியேற்றப்படும்.

அணையின் நீர்மட்டம் அதிகரிக்கும் போது தமிழக பகுதிக்கு திறக்கப்படும் நீர் நேரடியாக வைகை ஆற்றில் கலக்கிறது. இதனால் தமிழகத்திற்கு வெள்ள பாதிப்பு குறைவு. மாறாக லோயர் கேம்ப் நீர் மின் உற்பத்தி நிலையத்தில், மின் உற்பத்தியை இது அதிகரிக்கும். அதே நேரத்தில், தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாறு ஆற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு லேசான பாதிப்புகள் ஏற்படலாம். தற்போது தேனியில் 500 வீடுகளை மழைநீர் சூழ்ந்திருப்பதற்கும், அணையின் நீர் திறப்பு ஒரு வகையில் காரணமாகும். ஆனால், தேனியில் பெய்த பருவமழையே நீர் தேக்கத்திற்கு பிரதான காரணம்.மறுபுறம் கேரளா மாநிலம் வழியாவும் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் வல்லக்கடவு, வண்டிப்பெரியார், சப்பாத்து போன்ற பகுதிகளில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.