கொளுத்தும் வெயிலில் சிக்கித் தவிக்கும் இந்தியாவின் பாதி பகுதிகள் பருவமழைக்காக காத்திருக்கும்போது, கேரளாவில் தற்போது அதிகனமழை அதிக இடங்களில் பெய்து வருகிறது. 


கேரளாவில் இம்முறை பருவமழை முன்கூட்டியே பெய்து வருகிறது. இதன் காரணமாக கேரளாவில் ஏற்கனவே கனமழை பெய்ததால் வெள்ளத்தால் மக்கள் தவித்து வருகின்றனர். 






கேரளாவை பொறுத்தவரை எப்போது  தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதிக்கு மேல்தான் ஆரம்பிக்கும். இந்தமுறை 3-4 நாட்களுக்கு முன்பே கனமழை பெய்து வருகிறது. முன்னதாக, வானிலை ஆய்வு மையம் கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுத்திருந்தது. இப்படி ஒருபுறம் இருக்க, கடந்த சில நாட்களாக கேரளாவில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 






திருவனந்தபுரம்: 


திருவனந்தபுரத்தில் பல மணிநேரம் இடைவிடாமல் பெய்த மழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. 


திருவனந்தபுரத்தில் ஜூன் 2ம் தேதி வரை மழை மற்றும் இடியுடன் கூடிய மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் கேரளாவில் பருவமழை  தொடங்கியுள்ள நிலையில், திருவனந்தபுரத்தில் மழையின் தீவிரம் அதிகரிக்கலாம். IMD படி, திருவனந்தபுரத்தின் அதிகபட்ச வெப்பநிலை இந்த வாரம் முழுவதும் 30 முதல் 32 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. 






கொச்சியில் பெய்த கனமழையால் களமசேரி மூலேபாடம் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் தண்ணீட் புகுந்தது. இதையடுத்து, தீயணைப்பு படையினர் ரப்பர் படகுகள் மூலம் மக்களை மீட்டு களமாசாரி பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து 2வது நாளாக பெய்த கனமழையால் இப்பகுதியில் மூலேபாடம் பகுதியில் பல இடங்களில் கழுத்தளவு தண்ணீர் தேங்கியுள்ளது. 


வானிலை அப்டேட்: 


அடுத்த சில நாட்களுக்கு கேரளா மற்றும் லட்சத்தீவுகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வங்கக்கடலில் உருவான புயல் காரணமாக பருவமழைக்கு முந்தைய இந்த மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் மேற்கு கடற்கரையில் அதிலும் குறிப்பாக கேரளா மற்றும் கடலோட கர்நாடகாவின் சில பகுதிகளில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டது. 


தென்மேற்கு பருவமழை வருகின்ற ஜூன் 1-ஆம் தேதி கேரளாவை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு நாள் முன், பின் வந்தடையலாம். ஆனால், இந்த பருவமழை மிக அதிக மழையுடன் தொடங்காது. லேசானது முதல் மிதமானது வரை ஒருசில இடங்களிலும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், தமிழ்நாடு மற்றும் தெற்கு உள் கர்நாடகாவிலும் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.