கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, ஒட்டுமொத்த நாட்டையும் சோக கடலில் மூழ்கடித்துள்ளது. பலி எண்ணிக்கை 350ஐ தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சம்பவம் நடந்து ஒரு வாரம் நிறைவு பெற உள்ள நிலையில், வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத துயரம் நிறைந்த கதைகள் வெளியாகி வருகின்றன.


வார்த்தைகளால் விவரிக்க முடியாத கதைகள்: யாருக்காக பணம் சம்பாதிக்க வெளிநாடு சென்றாரோ அவர்களில் ஒருவர் கூட உயிருடன் இல்லாத நிலையில், தன்னந்தனியாக நிற்கிறார் நௌஃபல். மூன்று மாதங்களுக்கு முன்புதான், தான் பிறந்து, வளர்ந்த மலை கிராமமான முண்டக்கையில் இருந்து ஓமன் சென்றுள்ளார் நௌஃபல்.


தனது குடும்பத்திற்காக பணம் சம்பாதிப்பதற்காக வெளிநாடு சென்ற நௌஃபல், திரும்பி வந்து பார்க்கையில் அவர்களில் ஒருவர் கூட உயிருடன் இல்லை. வெளிநாடு செல்லும்போது, அன்றைக்குதான் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களை கடைசியாக பார்ப்பேன் என அவர் நினைத்து கூட பார்க்கவில்லை.


வயநாடு நிலச்சரிவில் தந்தை, தாய், மனைவி, குழந்தைகள், சகோதரன், மைத்துனர் மற்றும் அவர்களது குழந்தைகள் என 11 குடும்ப உறுப்பினர்களை இழந்து நிற்கிறார் நௌஃபல். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு இன்றுதான் வந்துள்ளார்.


சோகக் கடலில் வயநாடு: மூன்று மாதங்களுக்கு முன்பு வரை தன் வீடி இருந்த பகுதியில் தற்போது வெறும் மணல் குவியல்தான் இருக்கிறது. நௌஃபல், அதை, வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த காட்சி நமது மனதை உலுக்கும் வகையில் உள்ளது.


இதுகுறித்து அவரின் உறவினர் ஒருவர் கூறுகையில், "நௌஃபல் மூன்று மாதங்களுக்கு முன்புதான் ஓமன் சென்றார். இன்று கிராமம் திரும்பியபோது அவருக்கு எதுவும் மிச்சமில்லை. நிலச்சரிவில் சிக்கி அவரது குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்துள்ளனர்" என்றார்.


கடந்த புதன்கிழமை கேரளாவை அடைந்திருந்தாலும், தனது குக்கிராமத்திற்கு இன்றுதான் வந்துள்ளார். அவருக்கு ஆறுதல் கூற முடியாமல் அவரது உறவினர்களும் உள்ளூர்வாசிகள் தவித்து வருகின்றனர்.


முண்டக்கை மற்றும் சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில்தான், மோசமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் இருந்த தடமே தெரியாமல் மண்ணில் புதைந்துள்ளன. காணாமல் போன நூற்றுக்கணக்கானோரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.