இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆன்லைன் இ-வர்த்தக முறை மிகவும் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்தவகையில் சமீப காலங்களாக கொரோனா பாதிப்பு காரணமாக ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது மிகவும் அதிகமாகி உள்ளது. அந்தவகையில் ஆன்லைன் பொருட்கள் விற்பனையில் அவ்வப்போது சில பிரச்னைகளும் வாடிக்கையாளர்களுக்கு வருகிறது. அப்படி ஒரு பிரச்னை தற்போது ஒருவருக்கு வந்துள்ளது. அவர் ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக வேறு ஒரு பொருள் வந்துள்ளது பெரும் ஏமாற்றம் மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் நூருள் இஸ்லாம். இவர் கடந்த 12ஆம் தேதி அமேசான் தளத்தில் ஐபோன் 12 போனை 70,900 ரூபாய்க்கு ஆர்டர் செய்துள்ளார். அந்தப் போனின் டெலிவரி 15-ஆம் தேதி வந்துள்ளது. அவருக்கு வந்த பார்சலை பிரித்த பார்த்த போது அதில் ஐபோனிற்கு பதிலாக விம் பார் சோப்பு மற்றும் 5 ரூபாய் நாணயம் ஆகியவை இருந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நூருள் இதை ஒரு வீடியோவாக பதிவு செய்து அமேசான் தளத்தில் புகார் அளித்துள்ளார்.
அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக சைபர் க்ரைம் காவல்துறையிலும் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பெயரில் சைபர் க்ரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது நூருளுக்கு அனுப்ப வேண்டிய ஐபோனின் இஎம்ஐ நம்பரை வைத்து காவல்துறையினர் டிராக் செய்துள்ளனர். அந்தப் போன் கடந்த செப்டம்பர் மாதமே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால் நூருள் இஸ்லாம் அக்டோபர் மாதம் 12ஆம் தேதி தான் ஆர்டர் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து இந்த ஆதாரங்களை வைத்து சைபர் க்ரைம் காவல்துறையினர் தெலங்கானாவிலுள்ள விற்பனையாளரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர்.
அதற்கு அந்த விற்பனையாளர் நூருள் ஆர்டர் செய்த ஐபோன் ஸ்டாக் தற்போது இல்லை. அவருக்கு தவறுதலாக பார்சல் அனுப்பப்பட்டுள்ளது. அவருடைய பணம் திருப்பி செலுத்தப்படும் என்று கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து நூருள் இஸ்லாமிற்கு அவருடைய பணம் திரும்பி வந்ததாக கூறப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் சமீபத்தில் மிகவும் அதிகரித்து வருவது கடும் ஏமாற்றத்தை அளிக்கிறது.
ஏனென்றால் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இளைஞர் ஒருவர் மிந்த்ரா தளத்தில் கால்பந்து விளையாட்டின் போது அணியும் சாடாகிங்ஸ் என்ற சாக்ஸை வகையை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அந்த தளத்தில் இருந்து அவருக்கு வந்த பார்சலை அவர் திறந்து பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பார்சலில் அவருக்கு பெண்களின் உள்ளாடையான ப்ரா வந்துள்ளது . இதை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்து அந்த மிந்த்ரா தளத்தில் புகாரை பதிவு செய்துள்ளார். ஆனால் தற்போது வரை அதை மாற்றி தர எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்று அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.
இந்தியாவில் தற்போது உள்ள நுகர்வோர் உரிமைகளில் இ-வர்த்தக தளங்களும் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவு உள்ளது. இதை அனைத்து இ வர்த்தக தளங்களும் சரியாக கடைபிடிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: நெருப்புக்கு பயந்து 19 வது மாடியிலிருந்து குதித்த நபர்! பதைபதைக்க வைக்கும் வீடியோ!