நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாட்டில் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதற்கு பல்வேறு கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கச்சா எண்ணெயின் விலை மிகவும் குறைவாக உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலைகளை மத்திய அரசு கடுமையான வரிகள் மூலம் உயர்த்தி வருவதாக பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்து வரும் கேரளாவில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. கொச்சியில் உள்ள எடப்பள்ளி – வைடில்லா தேசிய நெடுஞ்சாலை 66ல் காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காங்கிரசார் நடத்திய இந்த போராட்டத்தினால் அந்த நெடுஞ்சாலையில் சான்ற வாகனங்கள் எல்லாம் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. இந்த சாலை மறியலினால் வேலைக்கு செல்பவர்கள், அத்தியாவசிய பணிக்கு செல்பவர்கள் என பலரும் மிகவும் அவதியுற்றனர். அந்த போக்குவரத்து நெரிசலில் மலையாள திரையுலகின் பிரபல நடிகரும், ஜெகமே தந்திரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவருமான ஜோஜூ ஜார்ஜ் தனது காரில் சிக்கிக்கொண்டார்.
இதையடுத்து, நடிகர் ஜார்ஜ் தனது காரில் இருந்து உடனடியாக கீழே இறங்கி சாலைமறியலில் ஈடுபட்டுள்ள காங்கிரசாரிடம் சென்றார். அங்கு அவர்களிடம் இந்த சாலை மறியலினால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவதாகவும், மருத்துவ மற்றும் அவசர தேவைகளுக்காக செல்பவர்கள் மிகவும் அவதிப்படுவதாகவும் கூறினார்.
நடிகர் ஜார்ஜூடன் சேர்ந்து சாலைமறியலில் சிக்கிக்கொண்ட வாகன ஓட்டிகள் பலரும் காங்கிரசாரிடம் இந்த போராட்டத்தினால் அவதிப்படுவதாக கூறியுள்ளனர். ஆனால், காங்கிரஸ் கட்சியினர் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் குடித்துவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும், அவர் அங்குள்ள மகளிர் காங்கிரசாரிடம் தகாத முறையில் நடப்பதாகவும் குற்றம் சாட்டினர். மேலும், ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர் நடிகர் ஜோஜூ ஜார்ஜின் கார் கண்ணாடியை உடைத்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நடிகர் ஜார்ஜை பத்திரமாக மீட்டு அந்த இடத்தில் இருந்து அழைத்துச் சென்றனர்.
இதுதொடர்பாக பேசிய நடிகர் ஜோஜூ ஜார்ஜ், “ நான் ஏதும் குறிப்பிட்ட கட்சிக்கு எதிராக போராடவில்லை. அவர்களது போராட்ட முறைகளுக்கு எதிராகதான் போராடினேன். எனது காருக்கு அடுத்த காரில் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுக்கக்கூடிய இளம் நோயாளி இருந்தார். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி எந்த போராட்டத்தின்போதும் சாலையை மறிக்கக்கூடாது. பலரும் காரின் உள்ளேயே அமர்ந்திருந்தனர். சிலர் சாலையில் வியர்த்து வேர்க்க இருந்தனர். அதனால்தான் நான் அவர்களிடம் சென்று நீங்கள் செய்வது போக்கிரித்தனம் என்றேன்.
அவர்கள் நான் குடித்திருந்ததாக புகார் செய்துள்ளனர். ஒரு காலத்தில் நான் குடித்தேன். ஆனால், இப்போது நான் குடிப்பதில்லை. சில தலைவர்கள் என்னுடைய தாய், தந்தை பற்றி அவதூறாக பேசுகின்றனர். அவர்கள் ஏன் அப்படி செய்கிறார்கள்? ஒருவேளை அவர்கள் என்னை பேசலாம். அடிக்கலாம். ஆனால், எனது பெற்றோர்கள் என்ன செய்தார்கள்?”
நடிகர் ஜோஜூ ஜார் தனது காரை காங்கிரஸ் கட்சியினர் சேதப்படுத்தியதாகவும், தனது பெற்றோர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். மருத்துவ பரிசோதனையில் நடிகர் ஜோஜூ அந்த நேரத்தில் குடிக்கவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. நடிகர் ஜோஜூஜார்ஜ் நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், அவர் நடிப்பிற்கான தேசிய விருதையும் வென்றுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்