கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பணக்காரர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இரண்டு பெண்களை, ஒரு தம்பதி நரபலி கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.


நரபலி சடங்கின்போது, இரண்டு பெண்கள் கொடூரமாக வெட்டப்பட்டதாகவும் அந்த உடல் பாகங்களை அந்த தம்பதியினர் சாப்பிட்டிருப்பதாக காவல்துறையினர் அதிர்ச்சி தகவலை பகிர்ந்திருந்தனர். பாதிக்கப்பட்ட ரோஸ்லின் மற்றும் பத்மா ஆகியோரின் கழுத்தை நெரிப்பதற்கு முன்பு அவர்கள் கட்டிவைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர்.


முக்கிய குற்றம் சாட்டப்பட்டவரான முகமது ஷஃபி, பாலியல் வக்கிரம் கொண்டவர் என்பது தெரிய வந்துள்ளது. மற்றவர்களை துன்புறுத்தி அதில் அவர் இன்பம் கண்டுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி, குற்றம்சாட்டப்பட்ட பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலாவின் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.


இந்நிலையில், பகவல் சிங் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. பேஸ்புக்கில், அவர் அடிக்கடி பதிவுகளை வெளியிட்டிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, மாற்று மருத்துவத்தில் சுயதொழில் செய்து வருவதாக அவர் பேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார். 60 வயதான பகவல் சிங், ஒரு சமூக சேவகராக அறியப்படுகிறார். கண்ணியமாக நடந்து கொள்பவர் என மக்கள் அவரை குறித்து குறிப்பிடுகின்றனர்.


இப்படிப்பட்ட நபர், எப்படி இப்படி கொடூரமாக கொலை செய்திருப்பார் என்பது மர்மமாகவே உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் மார்பகங்கள் துண்டிக்கப்பட்டு ரத்தம் சம்பவ இடம் முழுவதும் பரவ செய்யப்பட்டுள்ளது. அதில், ஒரு உடல் 56 துண்டுகளாக வெட்டப்பட்டுள்ளது. வெட்டப்பட்ட உடல் பாகங்கள் மூன்று குழிகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை காவல்துறை தலைமையே பகிர்ந்துள்ளார்.


2020 ஆம் ஆண்டு, 75 வயதான பெண் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் ஷஃபி ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஆபாசப் படத்தில் நடிக்க பணம் தருவதாகக் கூறி பாதிக்கப்பட்டவர்களை ஷபி அழைத்து வந்துள்ளார்.


அதே நேரத்தில், பகவல் சிங் மற்றும் லைலா ஆகியோரின் நிதிக் கஷ்டங்களை முடிவுக்குக் கொண்டு வரவும், பணக்காரர்களாகவும் ஒரு நரபலியை நடத்துமாறு அவர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார் என காவல்துறை தரப்பு கூறியுள்ளது.


இதுகுறித்து கேரள காவல்துறை தலைவர் சி.எச். நாகராஜு பேசுகையில், "பாதிக்கப்பட்டவர்களைக் கொன்ற பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் உடலின் பாகங்களைச் சாப்பிட்டிருக்கலாம். இது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை" என்றார்.


பகவல் சிங், மசாஜ் தெரபிஸ்ட்டாக உள்ளார். சமூக வலைதளங்களில், அவருக்கு என பின்தொடர்பாளர்கள் உள்ளனர். மாநிலத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் என தகவல் வெளியானது. ஆனால், அந்த தகவலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறுத்துள்ளது. ஜூன் மாதம் ரோஸ்லினும் செப்டம்பர் மாதம் பத்மாவும் காணாமல் போயுள்ளனர். பத்மா காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கொலை நடந்திருப்பது தெரியவந்தது. அந்த பெண்களின் ஃபோன்கள் ஷபியிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகள் மற்றும் அவர் விட்டுச் சென்ற கார் ஆகியவற்றின் உதவியுடன் அவரைக் கண்டுபிடித்தனர். விசாரணையின் ஒரு பகுதியாக பத்தனம்திட்டாவில் உள்ள வீட்டிற்கு போலீசார் அவரை அழைத்துச் சென்றனர். அங்கு பகவல் சிங்கும் அவரது மனைவியும் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.