Kerala HC: கேரளாவில் தகாத உறவால் கருவுற்ற 12 வயது சிறுமியின் வயிற்றில் உள்ள கரு, 34 வாரங்களை கடந்துவிட்டதால், அபாயங்களை கருத்தில்கொண்டு அதனை கலைக்க கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


12 வயது சிறுமியின் கருவை கலைக்க அனுமதி மறுப்பு:


18 வயதை கூட பூர்த்தி செய்யாத தனது சகோதரருடன், பாலியல் உறவில் ஈடுபட்டதால்,  12 வயது சிறுமியின் கருவை மருத்துவ ரீதியாக கலைக்க கேரள உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. கரு ஏற்கனவே 34 வார கர்ப்பத்தை அடைந்து முழுமையாக வளர்ச்சியடைந்துவிட்டதால், மருத்துவ ரீதியாக அதனை கலைக்க வாய்ப்பில்லை என்று கூறி, கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. இதுதொடர்பான தீர்ப்பில், “கரு முழுமையாக வளர்ச்சியடைந்துள்ளதோடு, கருப்பைக்கு வெளியே அதன் வாழ்க்கைக்குத் தயாராகிறது. இந்த கட்டத்தில் கருவை கலைப்பது சாத்தியமற்றது.  எனவே, குழந்தை பிறக்க அனுமதிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியை பெற்றோர்களின் காவலில் இருக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி,  குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அவரது சகோதரர் சிறுமியை எந்த சூழலிலும் அணுக முடியாததை உறுதி செய்யுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 36 வாரங்களுக்குப் பிறகு அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகி, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இயற்கையான முறையிலோ அல்லது அறுவை சிகிச்சை அடிப்படையிலோ குழந்தை பிறப்பதை உறுதி செய்யவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். 


வழக்கு விவரம்:


12 வயது சிறுமியின் 34 வார கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலைக்கக் கோரி அவரது பெற்றோர் நீதிமன்றத்தை அணுகினர். தற்போது கருவுற்று இருப்பது சிறுமிக்கு உடலியல் மற்றும் உளவியல் ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று மனுதாரர்கள் வாதிட்டனர். அதோடு சமீப காலம் வரை சிறுமியின் கர்ப்பம் குறித்து தங்களுக்கு தெரியாது என்று நீதிமன்றத்தில் வாதிட்டனர். 


மருத்துவக்குழு பரிந்துரை:


சிறுமியின் இளமை வயது மற்றும் உளவியல் அதிர்ச்சியைக் கருத்தில் கொண்டு 34 வார கருவை கலைக்கலாம் என முதலில் மருத்துவ குழு பரிந்துரைத்தது. அதேநேரம் நீதிமன்ற விசாரணையின்போது, அந்த சிறுமி தனது கருவை அதன் முழு காலத்திற்கு சுமக்கும் அளவுக்கு ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். ஆனால், மருத்துவக் குழுவின் அறிக்கைகள் போதுமானதாக இல்லாததால், சிறுமி மற்றும் கருவை மறுமதிப்பீடு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதில்,  கர்ப்பம் முழுவதையும் இன்னும் 2 வாரங்களுக்குத் தொடர்வது, சிறுமியின் மீது கடுமையான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று மருத்துவக் குழு பரிந்துரைத்தது. அதனை ஏற்ற நீதிமன்றம் சிறுமியின் கருவை கலைக்க அனுமதி மறுத்துள்ளது.


முன்னதாக, கடந்த ஆண்டு ஏப்ர மாதம் கொல்கத்தா உயர்நீதிமன்ற்த்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில்,  கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் 12 வயது சிறுமியின் கருவை மருத்துவ ரீதியாக கலைக்க அனுமதி கோரப்பட்டது. ஆனால்,  குறிப்பிட்ட வாரங்களுக்குப் பிறகு கருவை கலைப்பது தாய் மரணம் அடையும் அபாயத்தை உள்ளடக்கியது என்று கூறி, அந்த கோரிக்கையை கொல்கத்தா உயர்நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது.