கோவேக்சின் தடுப்பூசியைவிட கோவிஷீல்டு தடுப்பூசி சற்று அதிகமாக ஆன்டிபாடிக்களை உருவாக்குவதாகவும், அதேவேளையில் இரண்டு தடுப்பூசிகளுமே சிறந்த முறையில் நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்குவதாகவும் இந்திய மருத்துவர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று கடந்த 62 நாட்களுக்குப் பிறகு ஒரு லட்சத்திற்கும் கீழ் சரிவடைந்துள்ளது. இதற்கு தடுப்பூசியின் பங்களிப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்தியாவில் தற்போது பாரத்பயோ டெக் நிறுவனத்தின் கோவேக்சின், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளே பெரும்பாலான மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதைத்தவிர்த்து மேலும் 3 தடுப்பூசிகள் இறுதிக்கட்டப் பரிசோதனையில் இருக்கின்றன. இத்துடன், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது.




இந்நிலையில், கோவேக்சின் தடுப்பூசியைவிட கோவிஷீல்டு தடுப்பூசி சற்று அதிகமாக ஆன்டிபாடிக்களை உருவாக்குவதாகவும், அதேவேளையில் இரண்டு தடுப்பூசிகளுமே சிறந்த முறையில் நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்குவதாகவும் இந்திய மருத்துவர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வறிக்கை மெட்ரிசிவ் Medrxiv என்ற மருத்துவ இதழலில் கடந்த 2ம் தேதி வெளியானது. இந்த ஆய்வுக்காக, 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 515 மருத்துவ முன்களப்பணியாளர்கள் கண்காணிக்கப்பட்டனர். இவர்களில் 425 பேர் கோவிஷீல்டு தடுப்பூசியும், 90 பேர் கோவேக்சின் தடுப்பூசியும் போட்டுக்கொண்டிருந்தனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், கோவிஷீல்டு செலுத்திக் கொண்டவர்களிடம் 98.1% ஸீரோபாஸிட்டிவிட்டி ஏற்பட்டிருந்ததும், கோவேக்சின் செலுத்திக்கொண்டவர்களில் 80.0% ஸீரோபாஸிட்டிவிட்டி ஏற்பட்டிருந்ததும் தெரியவந்தது. அதேபோல், கோவிஷீல்டு செலுத்திக் கொண்டவர்களுக்கு ஆன்டிஸ்பைக் ஆன்டிபாடிக்களும் அதிகளவில் இருப்பது தெரியவந்தது.




ஸீரோபாசிட்டிவிட்டி என்றால் என்ன?
தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் போது நம் உடலில் நோய் எதிர்ப்புப் புரதம் ஆன்டிபாடிக்கள் உருவாகும். அவ்வாறு உடலில் ஆன்டிபாடிக்கள் உருவாவதே ஸீரோபாசிட்டிவிட்டி எனப்படுகிறது. அதேபோல்,  எவ்வளவு ஆன்டிபாடி உருவாகியிருக்கிறது என்பதை அளவிட்டுச் சொல்வதே டைட்டர் (titre) எனப்படுகிறது.
தடுப்பூசிகள் செயலாற்றலை ஒப்பிட்டுப் பார்க்கும் இந்த ஆய்வு, கொரோனா பாதித்து மீண்டவர்கள் மத்தியிலும் சாதாரண நபர்கள் மத்தியிலும் தடுப்பூசி எவ்வாறு செயல்படுகிறது என்பதை கணிக்கவே நடத்தப்பட்டிருக்கிறது. 
கொரோனா தடுப்பூசி முதல் தவணைக்கு 6 வாரங்களுக்கு முன்னதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பின்னர் இரண்டு டோஸ் தடுப்பூசியையும் போட்டுக்கொண்டவர்களுக்கு 100 சதவீதம் ஸீரோபாசிட்டிவிட்டி இருப்பது உறுதியாகியுள்ளது. அவர்களின் டைட்டர் அளவும் அதிமாகயிருக்கிறது.
கொரோனா பாதிப்புக்குப் பின்னர் இரண்டு தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்றை ஒரு டோஸாவது செலுத்திக் கொண்டவர்களின் எதிர்ப்பாற்றல் சிறப்பாக இருப்பதாக கொல்கத்தா ஜிடி மருத்துவமனை மருத்துவர் அவதேஷ் குமார் சிங் தெரிவித்தார். இருப்பினும், கோவிஷீல்டு கூடுதல் ஸீரோபாசிட்டிவிட்டி, கூடுதல் டைட்டரை உர்ய்வாக்குகிறது என்றார்.




இந்த ஆய்வில் பங்கேற்ற 515 பேர் நாடுமுழுவதும் 13 மாநிலங்களில் 22 நகரங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 305 பேர் ஆண்கள்.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டோரின் ஆன்ட்டிபாடி அளவுகள் 4 முறை பரிசோதிக்கப்பட்டது. முதல் தவணை தடுப்பூசியிலிருந்து 21வது நாள், இரண்டாவது தவணை தடுப்பூசியிலிருந்து 21 முதல் 28வது நாள், மூன்றாவது மாதம், 6வது மாதம் என சோதனை செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல், ஸீரோபாசிட்டிவிட்டி 60 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு அதிகமாக இருப்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது.
இணை நோய் உள்ளோரைப் பொறுத்தவரையில், T2DM (type 2 diabetes) உள்ளோர் மத்தியில் இரண்டு தடுப்பூசிகளுமே சற்று குறைந்த அளவிலான ஸீரோபாசிட்டிவிட்டியையே உருவாக்குகிறது என்பதும் தெரியவந்திருக்கிறது.